சென்னிமலை அருகே உள்ள பூப்பறிக்கும் மலை அழிக்கப்படுவதை தடுக்க வேண்டும்- கலெக்டர் அலுவலகத்தில் சமூக ஆர்வலர் மனு
சென்னிமலை அருகே உள்ள பூப்பறிக்கும் மலை அழிக்கப்படுவதை தடுக்க வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது.
ஈரோடு
சென்னிமலை அருகே உள்ள பூப்பறிக்கும் மலை அழிக்கப்படுவதை தடுக்க வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது.
பூப்பறிக்கும் மலை
தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளரும், சமூக ஆர்வலருமான முகிலன், ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்துள்ள மனுவில் கூறியிருந்ததாவது:-
சென்னிமலை பேரூராட்சிக்கு உட்பட்ட உப்பிலிபாளையம் ரோட்டுக்கு தென்புறம் 30 அடி உயரமுள்ள பூப்பறிக்கும் மலை உள்ளது. சட்டவிரோதமாக பட்டா நிலம் என பொய்யான ஆவணங்களை தயாரித்து தற்போது இந்த மலையை அழித்து வருகிறார்கள். இதற்கு அரசு அதிகாரிகளும் துணை போகின்றனர். நிலம் தொடர்பான ஆவணங்கள் ஈரோடு கலெக்டர் அலுவலகத்திலேயே இல்லை என்றும், ஆவணங்கள் சிதிலமடைந்து விட்டது என்றும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ஆவணங்கள் கேட்டதற்கு அதிகாரிகள் பதில் கொடுத்துள்ளனர்.
நிலம் தொடர்பான ஆவணங்கள் வருவாய் துறையிடம் மட்டுமின்றி நிலம் பற்றி நாடு முழுக்க 1860-ம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சியில் சர்வே செய்யப்பட்டு சர்வே ஆப் இந்தியா 1927-ல் தான் முதன் முதலில் வரைபடம் தயாரித்து உள்ளனர். மேலும் 1957, 1977, 2015 -ம் ஆண்டுகளில் நாடு முழுக்க சர்வே செய்து வரைபடம் தயாரித்து உள்ளது. சர்வே ஆப் இந்தியா 2015-ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட சென்னிமலை பகுதியை உள்ளடக்கிய வரைபடம் நிலப்பகுதியை துல்லியமாக அளவிட்டு நிலத்தின் தன்மையை பொறுத்து வண்ணமிட்டு காட்டப்பட்டு உள்ளது.
வரைபடம்
பாதுகாக்கப்பட்ட வன பகுதியாக இருந்தால் பச்சை நிறமும், வருவாய்த்துறை நிலமாக இருந்தால் வெள்ளை நிறமும், விவசாய நிலமாக இருந்தால் மஞ்சள் நிறமும் என அடையாளம் இட்டு காட்டப்பட்டுள்ளது. சர்வே ஆப் இந்தியா சார்பில் தயாரிக்கப்பட்ட வரைபடம் அடிப்படையில் சென்னிமலை பூப்பறிக்கும் மலை, நிறம் வெள்ளையாக காட்டப்பட்டு வருவாய்த்துறை நிலமாக குறிக்கப்பட்டு உள்ளது. இதுவே சென்னிமலை பூப்பறிக்கும் மலை வருவாய் துறையை சேர்ந்தது என்பதற்கு மிகப்பெரிய ஆதார ஆவணமாகும்.
மேலும் உண்மையில் வருவாய் துறை ஆவணங்களிலும் தெளிவாக பூப்பறிக்கும் மலை அரசு புறம்போக்கு நிலமாக காட்டப்பட்டுள்ளது. எனவே சென்னிமலை பூப்பறிக்கும் மலை அரசு புறம்போக்கு நிலமாக உள்ளதால், உடனடியாக பூப்பறிக்கும் மலை அழிக்கப்படுவதை தடுக்க வேண்டும். தனி நபரிடம் உள்ள இந்த இடத்தை கையகப்படுத்தி அரசு நிலமாக வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியிருந்தார்.
Related Tags :
Next Story