நிலஅளவை அலுவலர்கள் தற்செயல் விடுப்பு போராட்டம்
14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நிலஅளவை அலுவலர்கள் தற்செயல் விடுப்பு போராட்டம் நடத்தினர்.
விழுப்புரம்,
நில அளவைத்துறையில் களப்பணியாளர்களின் பணிச்சுமையை குறைத்து பணியை முறைப்படுத்த வேண்டும், நில அளவர் முதல் கூடுதல் இயக்குனர் வரை உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், நிலுவை மனுக்களை காரணம் காட்டி மேற்கொள்ளும் மாவட்ட மாறுதல்களையும், ஒழுங்கு நடவடிக்கையையும் கைவிட வேண்டும், தள்ளுபடி விகிதத்தை குறைத்திட கூட்டுப்பட்டா பரிந்துரையை ஏற்படுத்த வேண்டும், ஊழியர் விரோத போக்கை கடைபிடிக்கும் உயர் அலுவலர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன போன்ற 14 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நேற்று தமிழகம் முழுவதும் தமிழ்நாடு நிலஅளவை அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் தற்செயல் விடுப்பு போராட்டம் நடைபெற்றது.அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் நில அளவை அளவையர்கள், குறுவட்ட அளவையர்கள், சார் ஆய்வாளர்கள், வட்ட துணை ஆய்வாளர்கள், கோட்ட ஆய்வாளர் உள்ளிட்டோர் நேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி பணிக்கு செல்லாமல் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பல்வேறு பணிகள் பாதிப்பு
இவர்களின் இந்த போராட்டம் காரணமாக கலெக்டர் அலுவலகத்தில் உள்ள நில அளவை ஆய்வாளர் அலுவலகம் மற்றும் மாவட்டத்தில் 9 தாலுகா அலுவலகங்களில் உள்ள நில அளவை பிரிவு அலுவலகங்கள், திண்டிவனம் சிப்காட் (நில எடுப்பு) அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்களில் ஊழியர்கள், அலுவலர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன.
மேலும் இந்த போராட்டத்தினால் நில அளவைத்துறை பணிகளான அளவீடு செய்வது, பட்டா மாற்றம் செய்யும் பணிகள், ஆதிதிராவிடர் நலத்துறைக்கு வழங்கப்பட்ட பட்டாக்களை கணினியில் பதிவேற்றம் செய்யும் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டன.
Related Tags :
Next Story