காதலர் தினம்: காதல் கணவர் வீட்டுக்கு வராததால் இளம்பெண் தூக்கு போட்டு சாவு


காதலர் தினம்: காதல் கணவர் வீட்டுக்கு வராததால்  இளம்பெண் தூக்கு போட்டு சாவு
x
தினத்தந்தி 15 Feb 2022 8:52 PM IST (Updated: 15 Feb 2022 8:52 PM IST)
t-max-icont-min-icon

காதலர் தினத்தன்று காதல் கணவர் வீட்டுக்கு வராததால் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்

ஆறுமுகநேரி:
காதலர் தினத்தன்று காதல் கணவர் வீட்டுக்கு வராததால் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சோக சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
காதல் திருமணம்
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் நகரசபை பகுதியான லட்சுமிபுரத்தில் வசித்து வருபவர் அரசமுத்து. இவரது மனைவி அஞ்சனாதேவி (வயது 30). அரசுமுத்துவின் சொந்த ஊர் மணப்பாடு. இவரும், அஞ்சனாதேவியும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். இருவரும் காதலித்தனர். ஆனால் அரசமுத்துவின் பெற்றோர் இவர்கள் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை.
இந்தநிலையில் கடந்த 2020-ம் ஆண்டு குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவிலில் வைத்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
வாடகை வீடு
பின்னர் கணவனும், மனைவியும் லட்சுமிபுரத்தில் வாடகைக்கு வீடு எடுத்து குடியேறினர். அரசமுத்து நெல்லையில் தங்கி கட்டிட வேலை பார்த்து வருகிறார். அடிக்கடி வந்து செல்ல சிரமமாக இருந்ததால் வாரத்தில் திங்கட்கிழமை வேலைக்கு சென்று அங்கேயே தங்கி வேலைபார்த்து விட்டு சனிக்கிழமை வீட்டிற்கு வந்து விடுவார்.
ஆனால் அஞ்சனாதேவி அடிக்கடி தனது கணவரிடம் போனில் பேசி, வீட்டிற்கு வாருங்கள் என்று வற்புறுத்தியுள்ளார். அதற்கு அரசமுத்து, வேலைப்பளு காரணமாக அடிக்கடி வர இயலாது, வாரத்திற்கு ஒரு முறை வந்து செல்கிறேன். இடையிடையே வேலை இல்லாத நாட்களில் வந்து விடுகிறேன், என்று கூறி வந்துள்ளார்.
தூக்க மாத்திரை தின்றார்
இதனை ஏற்க மறுத்து அஞ்சனாதேவி தனது கணவரிடம் வாக்குவாதம் செய்துள்ளார். நீங்கள் வரவில்லை என்றால் நான் செத்துப்போவேன் என்று அடிக்கடி தனது கணவனை அஞ்சனாதேவி மிரட்டியுள்ளார்.
கடந்த 6 மாதங்களுக்கு முன்பும் வீட்டிற்கு வரவில்லை என்பதை காரணம் காட்டி தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு பிறகு குணம் அடைந்துள்ளார்.
தற்கொலை
இந்தநிலையில் கடந்த 12-ந் தேதி அரசமுத்து வீட்டிற்கு வந்து விட்டு 13-ந் தேதி வேலைக்கு சென்றார்.
அடுத்த நாள் (14-ந் தேதி) நீங்கள் வீட்டுக்கு வரவேண்டும் என்று அஞ்சனாதேவி அரசமுத்துவிடம் போனில் பேசியுள்ளார். அதற்கு அரசமுத்து, என்ன காரணம் நேற்று தானே நான் வந்தேன். வேலை செய்ய வேண்டாமா? என்று கேட்டுள்ளார். அதற்கு அஞ்சனாதேவி இன்று (14-ந்தேதி) காதலர் தினம் நாம் இருவரும் காதலித்து திருமணம் செய்தவர்கள், எனவே நீங்கள் இன்று வீட்டிற்கு வர வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளார். அதற்கு அரசமுத்து வர இயலாத நிலையில் இருக்கிறேன். புரிந்து கொள் என்று கூறியபோதும் அஞ்சனாதேவி மிரட்டியுள்ளார்.
தூக்குப்போட்டு தற்கொலை
இருந்தாலும் காதல் மனைவி கோபப்படுகிறார் என்று அன்று இரவு 7 மணியளவில் அஞ்சனாதேவிக்கு அரசமுத்து போன் செய்து உள்ளார். ஆனால் அஞ்சனாதேவி போனை எடுத்து பேசவில்லை. இதனால் அரசமுத்து பக்கத்திலுள்ள வீட்டு பெண் ஒருவருக்கு தகவல் சொல்லி என்ன என்று பாருங்கள் என்று கூறியுள்ளார். பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் சென்று பார்த்தபோது வீடு பூட்டி இருந்தது. ஜன்னல் வழியே எட்டி பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தனர். வீட்டில் துப்பட்டாவால் தூக்கில் தொங்கிய நிலையில் அஞ்சனாதேவி இறந்து கிடந்துள்ளார்.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் ஆறுமுகநேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி காயல்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார்.
சோகம்
அஞ்சனாதேவி வீட்டிற்குள் கோலப்பொடியால் `ஐ லவ் யூ மாமா' என எழுதி இருந்தார்.
காதல் கணவர் காதலர் தினத்தன்று வீட்டுக்கு வராததால் மனமுடைந்த அஞ்சனாதேவி இவ்வாறு எழுதி வைத்துவிட்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story