பதற்றமான வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஒட்டி பதற்றமான வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது. நீலகிரியில் 1,130 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
ஊட்டி
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஒட்டி பதற்றமான வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது. நீலகிரியில் 1,130 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
பதற்றமான வாக்குச்சாவடிகள்
நீலகிரி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஒட்டி 406 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது. இதில் பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு, முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஊட்டி நகராட்சியில் சுல்தான்பேட்டை, காந்தல், பாம்பேகேசில், வண்டிச் சோலையில் உள்ள பள்ளிகள் உள்பட 13 வாக்குச்சாவடிகள், குன்னூர் நகராட்சியில் 5 வாக்குச்சாவடிகள், கூடலூர் நகராட்சியில் 16 வாக்குச் சாவடிகள், நெல்லியாளம் நகராட்சியில் 8 வாக்குச்சாவடிகள், உலிக்கல் பேரூராட்சியில் 6 வாக்குச்சாவடிகள், ஓவேலி பேரூராட்சியில் 7 வாக்குச்சாவடிகள் என மொத்தம் 55 வாக்குச் சாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகளாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
கண்காணிப்பு கேமராக்கள்
பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்பட அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு நடவடிக்கையை கண்காணிக்கவும், அசம்பாவிதம் ஏற்படாமல் அமைதியான முறையில் நடைபெறுவதை ஆய்வு மேற்கொள்ளவும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நடந்து வருகிறது.
ஊட்டி நகராட்சியில் பதற்றமான வாக்குச்சாவடிகள் மற்றும் பிற வாக்குச்சாவடிகளில் நேற்று கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. மேலும் பதற்றமான வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்களுக்கு இன்டர்நெட் வசதி கொடுக்கப்பட்டு மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் கட்டுப்பாட்டு அறையில் இருந்து பதிவாகும் காட்சிகளை கண்காணிக்க வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் தலா ஒரு கேமரா பொருத்தப்படுகிறது.
1,130 போலீஸ் பாதுகாப்பு
நீலகிரியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஒட்டி வாக்குப்பதிவு அமைதியாக நடைபெறும் பொருட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது. ஊட்டி ஊரகம், ஊட்டி நகரம், குன்னூர், தேவாலா, கூடலூர் ஆகிய 5 காவல் உட்கோட்டங்களில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களில் இருந்தும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
ஆயுதப்படை உள்பட 700 போலீசார், ஊர்க்காவல் படையினர் 350 பேர் உள்பட மொத்தம் 1,130 போலீசார் வாக்குச்சாவடிகள், வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட இருக்கின்றனர்.
சோதனை சாவடிகளில் வாகன சோதனை தீவிரப்பபடுத்தப்பட்டு, முக்கிய இடங்களில் போலீசார் ரோந்து செல்கின்றனர். பதற்றமான வாக்குச்சாவடிகளில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அளவில் போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது.
Related Tags :
Next Story