8 ஆண்டு கால பாஜனதா அரசின் சாதனைகளை கூறி மக்களிடம் ஓட்டு கேட்க முடியுமா கிருஷ்ணகிரியில் சீமான் கேள்வி
8 ஆண்டு கால பாஜனதா அரசின் சாதனைகளை கூறி அந்த கட்சியினர் மக்களை சந்தித்து ஓட்டு கேட்க முடியுமா என்று சீமான் கூறினார்.
கிருஷ்ணகிரி:
8 ஆண்டு கால பா.ஜனதா அரசின் சாதனைகளை கூறி, அந்த கட்சியினர் மக்களை சந்தித்து ஓட்டு கேட்க முடியுமா என்று சீமான் கூறினார்.
பிரசார கூட்டம்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிமுகம் மற்றும் தேர்தல் பிரசார கூட்டம் கிருஷ்ணகிரியில் நேற்று மாலை நடந்தது. இந்த கூட்டத்தில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
கொரோனாவை காரணம் காட்டி தேர்தல் பிரசார பொதுக்கூட்டங்களுக்கு முதலில் அனுமதி தரவில்லை. ஆனால் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி ஆகியோர் எல்லா இடங்களுக்கும் சென்று பிரசாரம் செய்கிறார்கள். நாங்கள் தேர்தல் ஆணையத்திடம் கேட்ட போது நீங்களும் பிரசாரம் செய்து கொள்ளுங்கள் என கூறுகிறார்கள். இந்த அனுமதியை அவர்கள் முதலில் தந்திருந்தால் தேர்தல் பிரசாரத்திற்கான திட்டத்தை வகுத்து இருக்க முடியும்.
மதமாற்றத்தை வைத்து அரசியல்
தேர்தல் ஆணைய உத்தரவை நாங்கள் மதித்து நடக்கிறோம். மாணவி லாவண்யா மரண விவகாரத்தில் பா.ஜனதாவினர் அரசியல் செய்கிறார்கள். 8 ஆண்டுகள் அவர்கள் தானே மத்தியில் ஆட்சியில் உள்ளார்கள். அவர்கள் ஆட்சியில் செய்த சாதனைகளை கூறி மக்களை சந்தித்து ஓட்டு கேட்க முடியுமா?. மாறாக மதமாற்றத்தை வைத்து அரசியல் செய்கிறார்கள். இன்று எத்தனையோ கிறிஸ்தவ, இஸ்லாமிய கல்வி நிறுவனங்கள் உள்ளன.
அதில் படித்த எத்தனையோ பேர் அரசியல் கட்சி தலைவர்களாகவும், மிக உயர்ந்த பதவிகளுக்கும் வந்துள்ளார்கள். அவர்களை எல்லாம் அந்த கல்வி நிறுவனங்கள் மத மாற்றம் செய்ய நிர்பந்தித்தார்களா?. மாணவி லாவண்யாவை மட்டும் அந்த கல்வி நிறுவனம் மதமாற்றம் செய்ய முயன்றார்களா? எத்தனையோ மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள்.
மக்கள் தான் கூற வேண்டும்
காவிரி நதிநீர் பிரச்சினை உள்ளிட்ட எத்தனையோ பிரச்சினைகள் நாட்டில் உள்ள போது மதத்தை கையில் எடுக்க வேண்டிய அவசியம் என்ன?. மதசார்பற்ற நாடு என்று கூறி, மதத்தை கையில் எடுக்க கூடாது. பா.ஜனதா தேர்தலில் மக்களிடம் சாதனைகளை கூறி ஓட்டு கேட்காமல் மக்களை திசை திருப்புகிறார்கள். கட்சி அலுவலகத்தில் குண்டு போட்டார்கள் என கூறுகிறார்கள். இத்தனை நாள் வராத குண்டு தேர்தலின் போது வர வேண்டிய அவசியம் என்ன?.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க., பா.ஜனதா தனித்துபோட்டி என்பது அவர்கள் கட்சி சார்ந்த விஷயம். அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் ஒன்றாக கூட்டணி வைத்து சந்திப்பதாக கூறியுள்ளார்கள். எனவே இது தொடர்பாக நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. 8 மாத கால தி.மு.க. ஆட்சி குறித்து மக்கள் தான் கருத்து கூற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story