மாமனாரை கொலை செய்த வழக்கில் கைதாகி ஜாமீனில் வந்த ராணுவவீரர் வெட்டிக்கொலை மனைவி உள்பட 7 பேருக்கு போலீஸ் வலைவீச்சு
காவேரிப்பட்டணம் அருகே மாமனாரை கொலை செய்த வழக்கில் கைதாகி ஜாமீனில் வந்த ராணுவ வீரர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது மனைவி உள்பட 7 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
காவேரிப்பட்டணம்:
காவேரிப்பட்டணம் அருகே மாமனாரை கொலை செய்த வழக்கில் கைதாகி ஜாமீனில் வந்த ராணுவ வீரர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது மனைவி உள்பட 7 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
ராணுவ வீரர்
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ள பண்ணந்தூர் இந்திரா நகர் காலனியை சேர்ந்தவர் சொக்கலிங்கம். இவரது மகன் நரேஷ்குமார் (வயது 40). ராணுவ வீரர். இவர் மேற்கு வங்க மாநிலத்தில் ராணுவத்தில் பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி சசிகலா (36). இவர்களுக்கு 2 மகன், ஒரு மகள் உள்ளனர்.
நரேஷ்குமாருக்கும், அவரது மனைவி சசிகலாவிற்கும் இடையே குடும்ப தகராறு இருந்தது. இந்த நிலையில் கடந்த 6.3.2021 அன்று தனது மாமனார் மகாலிங்கத்தின் வீட்டிற்கு சென்ற நரேஷ்குமார் அவரை கத்தியால் குத்திக்கொலை செய்தார். இந்த கொலை தொடர்பாக நரேஷ்குமார் கிருஷ்ணகிரி கோர்ட்டில் சரண் அடைந்தார்.
ஜாமீனில் விடுதலை
பின்னர் அவரை போலீசார் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இதனிடையே நரேஷ்குமார் ஜாமீனில் விடுதலையாகி வெளியே வந்தார். இதன்பிறகு நரேஷ்குமாருக்கும், அவரது மனைவி குடும்பத்தினருக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்தது.
இந்த நிலையில் கடந்த 13-ந்தேதி நரேஷ்குமார் பண்ணந்தூருக்கு வந்தார். இதை அறிந்த அவரது மனைவி சசிகலா மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்தவர்கள், நரேஷ்குமாரை சுற்றி வளைத்து கட்டையால் தாக்கினார்கள். மேலும் அரிவாளால் சரமாரியாக வெட்டினார்கள்.
பரிதாப சாவு
இதில் பலத்த காயம் அடைந்த நரேஷ்குமாரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நரேஷ்குமார் நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக ஆரம்பத்தில் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்திருந்த பாரூர் போலீசார் தற்போது இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி உள்ளனர்.
இந்த கொலை வழக்கு தொடர்பாக பாரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் வழக்குப்பதிவு செய்து, முன்னாள் ராணுவ வீரர் பரமேஸ்வரன் (38), நரேஷ்குமாரின் மனைவி சசிகலா, திருப்பூர் மாநகர ஆயுதப்படை போலீஸ்காரர் மகேஸ்வரன் (30), பரமேஸ்வரனின் மனைவி தீபா (35), மகேஸ்வரனின் மனைவி ராஜகுமாரி (27), வடிவேல் (30), சதீஷ் (27) ஆகிய 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story