11 இடங்களில் வாக்கு எண்ணும் மையங்கள்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக தேனி மாவட்டத்தில் 11 இடங்களில் வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு பாதுகாப்பு முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே ஆய்வு செய்தார்.
தேனி:
வாக்கு எண்ணும் மையம்
தேனி மாவட்டத்தில் 6 நகராட்சிகள், 22 பேரூராட்சிகளில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. வருகிற 19-ந்தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. வாக்குப்பதிவு முடிந்தவுடன் வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்படும். அங்கு வாக்கு எண்ணிக்கை வருகிற 22-ந்தேதி நடக்கும்.
இதற்காக தேனி மாவட்டத்தில் 11 இடங்களில் வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. பெரியகுளம் நகராட்சிக்கு பெரியகுளம் வி.எம். அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், தேனி அல்லிநகரம் நகராட்சிக்கு தேனி மேரி மாதா சி.எம்.ஐ. பப்ளிக் பள்ளியிலும், போடி நகராட்சிக்கு போடி ஸ்பைஸ்வேலி ஆசிரியர் கல்வியியல் கல்லூரியிலும் வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. அதுபோல், சின்னமனூர் நகராட்சிக்கு சின்னமனூர் காயத்ரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும், கம்பம் நகராட்சிக்கு நகராட்சி அலுவலகத்திலும், கூடலூர் நகராட்சிக்கு கீழக்கூடலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியிலும் வாக்கு எண்ணும் மையம் அமைந்துள்ளது.
பேரூராட்சிகள்
ஆண்டிப்பட்டி பேரூராட்சிக்கு ஆண்டிப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், போ.மீனாட்சிபுரம், பூதிப்புரம், மேலச்சொக்கநாதபுரம், பழனிசெட்டிபட்டி, வீரபாண்டி ஆகிய பேரூராட்சிகளுக்கு முத்துதேவன்பட்டியில் உள்ள தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும், அனுமந்தன்பட்டி, ஹைவேவிஸ், காமயகவுண்டன்பட்டி, குச்சனூர், மார்க்கையன்கோட்டை, ஓடைப்பட்டி, க.புதுப்பட்டி, உத்தமபாளையம் ஆகிய பேரூராட்சிகளுக்கு உத்தமபாளையம் ஹாஜி கருத்தராவுத்தர் ஹவுதியா கல்லூரியிலும், கோம்பை, பண்ணைப்புரம், தேவாரம் ஆகிய பேரூராட்சிகளுக்கு கோம்பை ஸ்ரீகன்னிகா பரமேஸ்வரி மேல்நிலைப்பள்ளியிலும், தாமரைக்குளம், தென்கரை, வடுகபட்டி, தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி ஆகிய பேரூராட்சிகளுக்கு டி.வாடிப்பட்டி தேவாங்கர் பாலிடெக்னிக் கல்லூரியிலும் வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.
வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட போலீஸ் துறையினர் செய்து வருகின்றனர். அதுபோல், வாக்கு எண்ணும் மையங்களில் தேவையான அடிப்படை வசதிகள் பூர்த்தி செய்யப்படுவதோடு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மும்முரமாக நடந்து வருகின்றன.
போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
போடி, கோம்பையில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே ஆய்வு செய்தார். ஆய்வின் போது போலீஸ் துணை சூப்பிரண்டு அண்ணாதுரை, இன்ஸ்பெக்டர்கள் ராமலட்சுமி, சரவணன், ரமேஷ் குமார், ராஜேந்திரன், சஜுகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story