வாக்குச்சாவடியில் இருந்து 100 மீட்டருக்குள் கடைகள் வைக்க தடை


வாக்குச்சாவடியில் இருந்து 100 மீட்டருக்குள் கடைகள் வைக்க தடை
x
தினத்தந்தி 15 Feb 2022 11:26 PM IST (Updated: 15 Feb 2022 11:26 PM IST)
t-max-icont-min-icon

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந்தேதி நடக்கிறது. இதையொட்டி வாக்குச்சாவடியில் இருந்து 100 மீட்டருக்குள் கடைகள் வைக்க தடை விதிக்கப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் கூறினார்.

கடலூர், 

கடலூர் மாவட்டத்தில் 1 மாநகராட்சி, 6 நகராட்சிகள், 14 பேரூராட்சிகளுக்கான தேர்தல் வருகிற 19-ந்தேதி நடக் கிறது. இந்த தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம், பரிசுப்பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா? புதுச்சேரி மாநிலத்தில் இருந்து கடலூருக்கு மதுபாட்டில்கள் கடத்தப்படுகிறதா? என்பதை பறக்கும் படையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இது தவிர மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசாரும் சோதனைச்சாவடிகளில் தீவிரமாக வாகன சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று கடலூர் ஆல்பேட்டை சோதனைச்சாவடியில் பறக்கும் படையினர், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் வாகன சோதனை நடத்தினர்.

ஆய்வு

அப்போது புதுச்சேரியில் இருந்து வாகனங்களில் மதுபாட்டில்கள் ஏதேனும் கடத்தப்படுகிறதா?, வாக்காளர்களுக்கு வினியோகம் செய்ய பணம், பரிசுப்பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா? என்று தீவிரமாக சோதனை நடத்தினர். இதை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கடைகள் வைக்க தடை

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி 410 பதற்றமான, மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளது. அதில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இது தவிர குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருவோரை கண்காணித்து வருகிறோம். அவர்கள் வாக்குப்பதிவு நாளில் ஓட்டு போட்டவுடன் வீட்டுக்கு செல்ல வேண்டும். மீறி வாக்குச்சாவடிகளில் சுற்றித்திரிந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.
வாக்குப்பதிவு நாளில் 100 மீட்டர் தூரத்திற்குள் கடைகள் வைக்க தடை விதிக்கப்படுகிறது. ஏனெனில் கடைகள் வைக்கும் போது தேவையில்லாமல் அங்கு மக்கள் கூட்டம் கூட வாய்ப்பு உள்ளது. ஆகவே இதை தவிர்க்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு செல்ல 57 நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது வாக்குப் பதிவு நாளில் வாக்குச்சாவடிகளை கண்காணிக்க 59 நடமாடும் குழுக்களும் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கண்காணிப்பு

இவர்கள் வாக்குச்சாவடிகளில் தேவையில்லாமல் கூட்டமாக நிற்பவர்களை கண்காணித்து, அப்புறப்படுத்துவார்கள். குறிப்பாக ரவுடிகளை தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுப்பார்கள். இவ்வாறு போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் கூறினார். பேட்டியின் போது துணை போலீஸ் சூப்பிரண்டு கரிகால்பாரிசங்கர் உடனிருந்தார்.

Next Story