‘தினத்தந்தி’ புகார் பெட்டி


‘தினத்தந்தி’ புகார் பெட்டி
x
தினத்தந்தி 15 Feb 2022 11:48 PM IST (Updated: 15 Feb 2022 11:48 PM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

குண்டும், குழியுமான சாலை
திருச்சி மாவட்டம் லால்குடி தாலுகா ஆத்தூர் போஸ்ட், வாழியூரில் உள்ள 2 கிலோ மீட்டர் சாலை மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்து வருகிறார்கள். கடந்த 15 ஆண்டுகளாக இந்த சாலை சீரமைக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு இந்த சாலையை சீரமைக்க வேண்டும்.
பொதுமக்கள், திருச்சி.
சாக்கடை கால்வாயை மூடக்கோரிக்கை
திருச்சி மாவட்டம் லால்குடி தாலுகா குமுளூர்-பெருவளநல்லூர் சாலை விரிவாக்கம் செய்து 3 ஆண்டுகள் ஆகிறது. இந்தநிலையில் சாலையோரத்தில் சாக்கடை கால்வாய் கட்டப்பட்டு சுமார் 60 அடி தூரத்திற்கு மூடப்படாமல் உள்ளதால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அந்த வழியாக நடந்து செல்வோர் மிகவும் சிரமம் அடைந்து வருகிறார்கள். மேலும், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு நிலவி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சாக்கடை கால்வாய் மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நல்லுசாமி, குமுளூர், திருச்சி.
குடிநீருக்கு ஏங்கும் மக்கள்
திருச்சி மாவட்டம் துறையூர் தாலுகா ஆதனூர் ஊராட்சி கீரிப்பட்டி கிராமத்தில் 2020-2021-ம் ஆண்டு ஊராட்சி ஒன்றிய பொதுநிதியில் ஆழ்குழாய் கிணறு மற்றும் மின்மோட்டார் பொருத்தப்பட்டது. ஆனால் இன்றுவரை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு குடிநீர் இணைப்பு வழங்காமல் இருக்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் குடிநீருக்கு ஏங்கி வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மகேஷ்வரன், துறையூர், திருச்சி.
தெருவிளக்கு அமைக்கப்படுமா?
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் தாலுகா குருவம்பட்டி கிராமத்தில் உள்ள அர்ஜுன் தெருவில் தெருவிளக்கு வசதி ஏற்படுத்தி தரவில்லை. இதனால் அப்பகுதி இருளில் மூழ்கி உள்ளது. இதனால் இரவில் அந்த வழியாக செல்லும் பெண்கள் அச்சம் அடைந்து உள்ளனர். மேலும், பாம்பு, பூச்சி உள்ளிட்ட விஷ ஜந்துக்களின் நடமாட்டம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இப்பகுதியில் தெருவிளக்கு அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விஜய் மாணிக்கம், மண்ணச்சநல்லூர், திருச்சி.
புகை மண்டலத்தால் நோயாளிகள் அவதி
திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் ஒன்றியத்திலுள்ள எரகுடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு எதிரே ஆற்றின் கரையோரம் கொட்டப்படும் குப்பைகளை மர்ம ஆசாமிகள் தீ வைத்து எரிக்கிறார்கள். இதனால் அப்பகுதியில் கடும் புகைமூட்டம் நிலவுகிறது. இதனால் சிகிச்சைக்கு வரும் நோயாளிகள், கர்ப்பிணிகள், குழந்தைகள் அவதியடைந்து வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இப்பகுதியில் கொட்டப்பட்டு உள்ள குப்பைகளை உடனுக்குடன் அகற்றுவதுடன், இப்பகுதியில் தீவைக்கும் ஆசாமிகளை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தீபிகா, திருச்சி.

Next Story