ராஜேந்திர பாலாஜியிடம், போலீஸ் சூப்பிரண்டு நேரடி விசாரணை
பணமோசடி வழக்கு தொடர்பாக நேற்று 2-வது முறையாக விருதுநகரில் ராஜேந்திரபாலாஜி ஆஜரானார். அவரிடம், போலீஸ் சூப்பிரண்டு மனோகர் நேரடி விசாரணை நடத்தினார்.
விருதுநகர்,
பணமோசடி வழக்கு தொடர்பாக நேற்று 2-வது முறையாக விருதுநகரில் ராஜேந்திரபாலாஜி ஆஜரானார். அவரிடம், போலீஸ் சூப்பிரண்டு மனோகர் நேரடி விசாரணை நடத்தினார்.
2-வது முறையாக ஆஜர்
முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மீது 2 பண மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்கில் கர்நாடக மாநிலத்தில் கைது செய்யப்பட்ட அவருக்கு, சுப்ரீம் கோர்ட்டு நிபந்தனை ஜாமீன் வழங்கியதால் திருச்சி சிறையில் இருந்து வெளியே வந்தார்.
இதற்கிடையே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணம் அடைந்த அவர், கடந்த 12-ந் தேதி விருதுநகரில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். அன்றைய தினம் 11 மணி நேரம் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்தநிலையில் நேற்று 2-வது முறையாக அவர் விசாரணைக்கு அழைக்கப்பட்டார்.
இதையடுத்து பகல் 11 மணி அளவில் அவர் விருதுநகரில் குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்துக்கு வந்து ஆஜரானார். துணை போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் மற்றும் இன்ஸ்பெக்டர் கணேஷ்தாஸ் ஆகியோர் விசாரணை நடத்தினர்.
போலீஸ் சூப்பிரண்டு
இதனை தொடர்ந்து மாலை 4 மணி அளவில் விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர் அங்கு வந்து, அவரும் ராஜேந்திரபாலாஜியிடம் விசாரணை நடத்தினார். இந்த விசாரணை 2 மணி நேரம் நீடித்தது.
மொத்தத்தில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்தில் 2-வது நாளாக நேற்று நடைபெற்ற விசாரணை இரவு 7 மணி வரை நடைபெற்று, பின்னர் ராஜேந்திரபாலாஜி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
அடுத்தடுத்து கேள்வி
இந்த விசாரணை பற்றி போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, “இந்த வழக்கு விசாரணையை பொறுத்தமட்டில் எத்தனை கேள்விகள் ராஜேந்திர பாலாஜியிடம் கேட்கப்பட்டது என்று கணக்கிட முடியாது. ஏனெனில் விரிவான விவரங்களை கேட்கும் போது அடுத்தடுத்து கேள்வியை கேட்க வேண்டிய நிலை ஏற்படும். எனவே அவரிடம் இருந்து தெரிய வேண்டிய தகவல்கள் கிடைக்கும் வரையில் கேள்விகள் கேட்கப்படும். எனவே குறிப்பிட்டு எத்தனை கேள்விகள் கேட்கப்பட்டது என்று சொல்ல முடியாது” என்றார். ராஜேந்திரபாலாஜியுடன் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. அவைத்தலைவர் வக்கீல் விஜயகுமரன் மற்றும் அ.தி.மு.க. வக்கீல் அணியினர் வந்திருந்தனர்.
Related Tags :
Next Story