தி.மு.க. ஆட்சியை எடை போட்டு தீர்ப்பு வழங்க மக்கள் தயார் ஆகிவிட்டார்கள்-ஓ.பன்னீர்செல்வம் பேச்சு


தி.மு.க. ஆட்சியை எடை போட்டு தீர்ப்பு வழங்க மக்கள் தயார் ஆகிவிட்டார்கள்-ஓ.பன்னீர்செல்வம் பேச்சு
x
தினத்தந்தி 16 Feb 2022 2:08 AM IST (Updated: 16 Feb 2022 2:08 AM IST)
t-max-icont-min-icon

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் மூலம் தி.மு.க. ஆட்சியை எடை போட்டு தீர்ப்பு வழங்க மக்கள் தயார் ஆகிவிட்டார்கள் என்று மதுரையில் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

மதுரை
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் மூலம் தி.மு.க. ஆட்சியை எடை போட்டு தீர்ப்பு வழங்க மக்கள் தயார் ஆகிவிட்டார்கள் என்று மதுரையில் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.
 தேர்தல் பிரசார கூட்டம்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து மதுரை பழங்காநத்தத்தில் நேற்று மாலை தேர்தல் பிரசார கூட்டம் நடந்தது. 
மதுரை மாவட்ட செயலாளர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுமான செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், ராஜன்செல்லப்பா ஆகியோர் தலைமை தாங்கினர். எம்.எல்.ஏ.க்கள் அய்யப்பன், பெரியபுள்ளான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பேட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து கடந்த 7-ந் தேதி காஞ்சியில் பிரசாரத்ைத தொடங்கி இன்று (நேற்று) மதுரை மீனாட்சி அம்மன் பட்டினத்தில் பிரசாரத்தை முடிக்கிறேன். எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் அ.தி.மு.க. உருவான காலத்தில் இருந்து மதுரையில் இருந்து தான் கட்சியின் கொள்கைகளை பிரகடனம் செய்வார்கள் என்பது வரலாறாக உள்ளது.
அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் நெல் உற்பத்தியில் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக கடந்த 5 ஆண்டுகளாக தமிழகம் இருந்தது. தமிழகத்தில் ஜீவாதார உரிமைகளுக்கு பாதிப்பு ஏற்படும் போது அதனை பாதுகாத்ததும் அ.தி.மு.க. அரசுதான். காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அரசாணையாக வெளியிட வைத்தவர் ஜெயலலிதா. 
 ஆண்ட கட்சியே மீண்டும் ஆட்சிக்கு வந்த பெருமையை 2016-ம் ஆண்டு ஜெயலலிதா ஏற்படுத்தினார். தொடர்ந்து 3-வது முறையாக 2021-ம் ஆண்டு மீண்டும் அ.தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சிக்கு வரும் என்ற நிலை இருந்தது. ஆனால் தி.மு.க. பொய்யான வாக்குறுதிகளை அறிவித்து மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்தது.
மக்களை ஏமாற்றிய தி.மு.க.
முதல்-அமைச்சர் ஸ்டாலின் ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வை ரத்து செய்வேன் என்று கூறினார். ஆனால் கடந்த 10 மாதங்கள் ஆகியும் அவர் நீட் தேர்வை ரத்து செய்யவில்லை. மகளிருக்கு 1000 ரூபாய் தருவதாக சொன்னார்கள். ஆனால் இதுவரை கொடுக்காமல் ஏமாற்றி வருகிறார்கள். 5 பவுன் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று கூறினார்கள். அதனை நம்பி 48 லட்சம் பேர் நகைகளை அடமானம் வைத்தார்கள். ஆட்சிக்கு வந்த பிறகு இதுகுறித்து கேட்ட போது தகுதி உள்ளவர்களுக்கு தான் ரத்து செய்யப்படும் என்றும், அது குறித்து ஆய்வு செய்து வருகிறோம் என்றனர். 
அதன்பின்னர் 13 லட்சம் பேர் தான் தகுதியானவர்கள் என்று அறிவித்தனர். இதன் மூலம் தமிழகத்தில் 35 லட்சம் பேரை கடனாளியாக்கி ஏமாற்றியது தி.மு.க. அரசு. 
அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் பொங்கல் பரிசுகளை தரமாக வழங்கி வந்தோம். ஆனால் தற்போது பொங்கல் பரிசு வழங்கினார்கள். அதில் வெல்லம் வீட்டிற்கு செல்வதற்குள் உருகி விட்டது. அரிசி மோசமாகவும், மற்ற பொருட்கள் தரம் குறைவாகவும் இருந்தது. மேலும் பொங்கல் உதவித்தொகையாக ரூ.2,500 வழங்கினோம். அப்போது ஸ்டாலின் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என்று கூறினார். ஆனால் தி.மு.க. ஆட்சியில் மக்கள் உதவித்தொகை கிடைக்கும் என்று நம்பி ஏமாந்து போனார்கள். பொங்கல் தொகுப்பை முறையாக வழங்காததால் முதல்-அமைச்சரால் வெளியே கூட்டம் போட்டு பேச முடியாத நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. இதையெல்லாம் 4 ஆண்டுகள் மக்கள் பொறுக்கமாட்டார்கள்.
எடை போட்டு பார்க்கும் தேர்தல்
எனவே தமிழகத்தில் உறுதியாக மறுமலர்ச்சியும் புரட்சியும் ஏற்படும். இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் வரை தமிழக மக்கள் ஓயமாட்டார்கள்.
தமிழக மக்கள் கடந்த கால அ.தி.மு.க. ஆட்சி, தற்போதுள்ள தி.மு.க. ஆட்சியை எடை போட்டு வருகிறார்கள். எனவே இந்த ஆட்சியை எடை போட்டு தீர்ப்பு வழங்க மக்கள் தயார் ஆகிவிட்டார்கள். நிச்சயம் மதுரை மாநகராட்சியை அ.தி.மு.க. கைப்பற்றும்.
இவ்வாறு அவர் பேசினார்.

Next Story