அரசு அதிகாரியை தாக்கிய வழக்கில் தாலுகா பஞ்சாயத்து தலைவர் உள்பட 4 பேர் கைது
அரசு அதிகாரியை தாக்கிய வழக்கில் செல்லகெரே தாலுகா பஞ்சாயத்து தலைவர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிக்கமகளூரு: அரசு அதிகாரியை தாக்கிய வழக்கில் செல்லகெரே தாலுகா பஞ்சாயத்து தலைவர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பஞ்சாயத்து அதிகாரி மீது தாக்குதல்
சித்ரதுர்கா மாவட்டம் செல்லகெரே தாலுகா பஞ்சாயத்து அலுவலகத்தில் வளர்ச்சி அதிகாரியாக பணியாற்றி வருபவர் மொடகின பசவப்பா. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் பஞ்சாயத்து அலுவலகத்தில் நரகோ திட்ட பணி குறித்து மொடகின பசவப்பா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்துக்கு பா.ஜனதா கட்சியை சேர்ந்த தாலுகா பஞ்சாயத்து தலைவர் சூரனஹள்ளி சீனிவாஸ், கவுன்சிலர்களான துரை நகராஜ், பசவராஜ், மற்றொரு நாகராஜ் ஆகிய 4 பேரை அழைக்கவில்லை என தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த 4 பேரும், செல்லகெரே தாலுகா பஞ்சாயத்து அலுவலகத்திற்குள் சென்று பணியில் இருந்த மொடகின பசப்பவிடம் ஏன் எங்களை கூட்டத்திற்கு அழைக்கவில்லை என்று வாக்குவாதம் செய்தனர். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் அவர்கள் 4 பேரும் சேர்ந்து மொடகின பசவப்பாவை தாக்கிவிட்டு சென்றுள்ளனர். இதில் அவர் காயம் அடைந்தார்.
4 பேர் கைது
இதுகுறித்து செல்லகெரே போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பா.ஜனதா கட்சியை சேர்ந்த செல்லகெரே தாலுகா பஞ்சாயத்து தலைவர் சூரனஹள்ளி சீனிவாஸ், கவுன்சிலர்கள் 3 பேரையும் கைது செய்தனர்.
கைதான 4 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
போராட்டம்-பரபரப்பு
இதற்கிடையே தாலுகா பஞ்சாயத்து வளர்ச்சி அதிகாரியை தாக்கியதை கண்டித்து அலுவலகம் முன்பு பஞ்சாயத்து உறுப்பினர்கள், கன்னட அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள், கைதானவர்களை விடுவிக்க கூடாது, கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷமிட்டனர். அவர்களை, போலீசார் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story