அலங்கார பொருட்கள் விற்பனை கடையில் தீ விபத்து
அலங்கார பொருட்கள் விற்பனை கடையில் தீ விபத்து ஏற்பட்டது.
பெரம்பலூர்:
அலங்கார பொருட்கள் விற்பனை கடை
பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகே புகழேந்தி என்பவருக்கு சொந்தமான தங்கும் விடுதி கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தின் பின் பகுதியில் தங்கும் விடுதியும், முன்புறம் முதல் மற்றும் 2-வது தளத்தில் கடைகளும் உள்ளன.
இதில் சத்தியநாதன்(வயது 38) என்பவர் கடந்த 4 ஆண்டுகளாக சூப்பர் பஜார் என்ற பெயரில் முதல் தளத்தில் அலங்கார பொருட்கள், 2-வது தளத்தில் பிளாஸ்டிக், அலுமினியப் பொருட்கள், அலங்கார பொருட்கள், விளையாட்டு பொம்மைகள் ஆகியவை விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார்.
தீப்பற்றி எரிந்தது
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் வியாபாரம் முடிந்த பின்னர் சத்தியநாதன் கடையை பூட்டிவிட்டு அருகே உள்ள எம்.வி.கே. நகரில் உள்ள தனது வீட்டிற்கு சென்று விட்டார். சிறிது நேரத்தில் அந்த கடையில் தீப்பற்றி எரிந்தது. 2-வது தள கட்டிடத்தின் வலது பக்கத்தில் உள்ள ஜன்னல் வழியாக தீ கொழுந்துவிட்டு எரிந்தது தெரியவந்தது.
அதனை பார்த்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
பொருட்கள் சேதம்
இதில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்கள் சேதமடைந்தன. மின்சாதனங்கள் பழுது காரணமாக தீப்பற்றியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் பழனிசாமி சம்பவ இடத்தை பார்வையிட்டு, தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story