முன்னாள் உள்துறை செயலாளரிடம் ஒருநபர் ஆணையம் விசாரணை
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக முன்னாள் உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டியிடம் ஒருநபர் ஆணைய அதிகாரி நேற்று விசாரணை நடத்தினார்
தூத்துக்குடி:
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக முன்னாள் உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டியிடம் ஒருநபர் ஆணைய அதிகாரி நேற்று விசாரணை நடத்தினார்.
விசாரணை
தூத்துக்குடியில் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 22-ந் தேதி துப்பாக்கி சூடு, தடியடி மற்றும் தொடர்ந்து நடந்த சம்பவங்களில் 13 பேர் பலியானார்கள். இந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் விசாரணை ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.
ஏற்கனவே 35 கட்டங்களாக பல்வேறு தரப்பினரிடம் விசாரணை நடத்தப்பட்டு உள்ளது. இதற்காக 1,421 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதில் 1,042 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலமும் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
முன்னாள் உள்துறை செயலாளர்
இதைத்தொடர்ந்து 36-வது கட்ட விசாரணை தூத்துக்குடி பீச் ரோடு விருந்தினர் மாளிகையில் உள்ள முகாம் அலுவலகத்தில் அதிகாரி அருணா ஜெகதீசன் தலைமையில் நடந்து வருகிறது. இதில் முன்னாள் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், கூடுதல் டி.ஜி.பி. விஜயகுமார், முன்னாள் டி.ஜி.பி. ராஜேந்திரன் ஆகியோர் நேரில் ஆஜரானர்கள். அவர்களிடம் ஒருநபர் ஆணைய அதிகாரி விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்தார்.
3-வது நாளான நேற்று முன்னாள் உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. அதன்படி அவர் நேற்று காலையில் ஒருநபர் ஆணையம் முன்பு ஆஜரானார். அவரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.
இந்த விசாரணை நாளை (வெள்ளிக்கிழமை) வரை நடக்கிறது.
Related Tags :
Next Story