கோவில் நிலத்தை பட்டா மாற்றம் செய்த கிராம நிர்வாக அலுவலர் உள்பட 3 பேர் மீது வழக்கு
நாகையில், போலி ஆவணங்கள் மூலம் கோவில் நிலத்தை பட்டா மாற்றம் செய்த கிராம நிர்வாக அலுவலர் உள்பட 3 பேர் மீது நாகை மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
வெளிப்பாளையம்:-
நாகையில், போலி ஆவணங்கள் மூலம் கோவில் நிலத்தை பட்டா மாற்றம் செய்த கிராம நிர்வாக அலுவலர் உள்பட 3 பேர் மீது நாகை மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
போலீசில் புகார்
நாகை அக்கரைப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சண்முகம். நாகை அருகே புத்தூரில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவில் கைங்கர்ய சபாவின் தலைவராக உள்ள இவர், நாகை மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசில் புகார் அளித்தார்.
அந்த புகாரில், அபகரிக்கப்பட்ட சுப்பிரமணியசுவாமி கோவில் இடத்தை மீட்டுத்தர வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.
பட்டா மாற்றம்
விசாரணையில், நாகை வட்டம் புத்தூர் பகுதி கிராம நிர்வாக அலுவலர் செல்வம், சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான ரூ.46 லட்சம் மதிப்பிலான 214 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட நிலத்தை போலி ஆவணங்கள் தயார் செய்து தனது தாயார் மலர்க்கொடி பெயருக்கு பட்டா மாற்றம் செய்து கொடுத்ததும், பின்னர் அந்த நிலத்தை தனது சகோதரர் தினகரனுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு தானம் கொடுத்ததும் தெரியவந்தது.
3 பேர் மீது வழக்கு
இதையடுத்து செல்வம், அவருடைய தாய் மலர்க்கொடி, சகோதரர் தினகரன் ஆகிய 3 பேர் மீது போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை அபகரித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story