மாசி மக பெருவிழாவையொட்டி விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் தேரோட்டம்


மாசி மக பெருவிழாவையொட்டி  விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் தேரோட்டம்
x
தினத்தந்தி 16 Feb 2022 10:37 PM IST (Updated: 16 Feb 2022 10:37 PM IST)
t-max-icont-min-icon

மாசி மக பெருவிழாவையொட்டி விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

விருத்தாசலம், 

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் பிரசித்தி பெற்ற விருத்தகிரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. பஞ்ச பூதங்களை மையமாக கொண்ட இக்கோவிலில் 5 மூர்த்திகள், 5 தேர்கள், 5 கோபுரங்கள், 5 பிரகாரங்கள், 5 தீர்த்தங்கள், 5 நந்திகள், 5 கொடிமரங்கள் என அனைத்தும் 5-ஆக அமையப்பெற்றுள்ளது தனிச்சிறப்பாகும். இக்கோவில் கும்பாபிஷேக விழா 20 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 6-ந்தேதி கோலாகலமாக நடைபெற்றது.
இதை தொடர்ந்து ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக நடைபெறும் மாசி மக பெருவிழா கடந்த 8-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து கடந்த 13-ந்தேதி விருத்தகிரீஸ்வரர் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி விபசித்து முனிவருக்கு காட்சி தரும் ஐதீக திருவிழா நடந்தது. இதைத்தொடர்ந்து தினந்தோறும் சாமிக்கு சிறப்பு பூஜையும், சாமி வீதிஉலாவும் நடைபெற்று வந்தது. 

பஞ்சமூர்த்திகள்

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 4.30 மணிக்கு விநாயகர், சுப்பிரமணியர், விருத்தகிரீஸ்வரர், விருத்தாம்பிகை மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகளுக்கும் பால், தயிர், இளநீர், பன்னீர், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு விதமான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. 
தொடர்ந்து ஏற்கனவே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த 5 தேர்களில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளினர். அப்போது அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஓம் நமசிவாய கோஷங்களை எழுப்பி வழிபட்டனர். 

தேரோட்டம்

இதையடுத்து அதிகாலை 5.45 மணிக்கு விநாயகர் தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். தேர் நான்கு கோட்டை வீதிகள் வழியாக சென்று நிலையை வந்தடைந்தது. பின்னர் 6.30 மணிக்கு சுப்பிரமணியர் எழுந்தருளிய தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று நிலையை வந்தடைந்தது. 
இதையடுத்து விருத்தகிரீஸ்வரர் எழுந்தருளிய தேரும், விருத்தாம்பிகை அம்மன் எழுந்தருளிய தேரும், சண்டிகேஸ்வரர் எழுந்தருளிய தேரும் ஒன்றன்பின் ஒன்றாக நான்கு கோட்டைகளையும் வலம் வந்து நிலையை வந்தடைந்தது. தொடர்ந்து பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. 
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். தேரோட்டத்தின் போது ஏதேனும் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

மாசி மக தீர்த்தவாரி

தொடர்ந்து சிகர நிகழ்ச்சியான மாசிமக தீர்த்தவாரி இன்று(வியாழக்கிழமை) நடைபெறுகிறது.  நாளை(வெள்ளிக்கிழமை) தெப்பத் திருவிழாவும், நாளை மறுநாள்(சனிக்கிழமை) சண்டிகேஸ்வரர் உற்சவமும், 20-ந் தேதி விடையாற்றி உற்சவம் ஆரம்ப நிகழ்ச்சியும், மார்ச் 1-ந் தேதி விடையாற்றி உற்சவம் நிறைவு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.  விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

Next Story