மழலையர் பள்ளிகள் திறப்பு


மழலையர் பள்ளிகள் திறப்பு
x
தினத்தந்தி 16 Feb 2022 11:04 PM IST (Updated: 16 Feb 2022 11:04 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் மாவட்டத்தில் 2 ஆண்டுகளுக்கு பிறகு பாதுகாப்பு அம்சங்களுடன் எல்.கே.ஜி., யு.கே.ஜி. குழந்தைகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. குழந்தைகளை பெற்றோர், உற்சாகத்துடன் பள்ளிக்கு அழைத்துச்சென்றனர்.

விழுப்புரம், 

தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் பொது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையொட்டி மாணவ- மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. நோய் தொற்று பரவலை தடுக்க அரசு எடுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக சில மாதங்களுக்கு பிறகு கொரோனா தொற்று படிப்படியாக குறைந்த நிலையில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டன.
இதையடுத்து கல்லூரிகள் மற்றும் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் ஏற்கனவே திறக்கப்பட்டன. இருப்பினும் நர்சரி பள்ளிகள் (எல்.கே.ஜி., யு.கே.ஜி.) மற்றும் மழலையர் விளையாட்டு பள்ளிகள் (பிளே ஸ்கூல்) மட்டும் திறக்கப்படவில்லை. இந்நிலையில் தற்போது கொரோனா தொற்று மேலும் குறைந்ததையடுத்து  நர்சரி பள்ளிகள், மழலையர் விளையாட்டு பள்ளிகளை திறக்க அரசு அனுமதி வழங்கியது. அதன்படி தமிழகம் முழுவதும் 2 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று முதல் நர்சரி பள்ளிகள், மழலையர் விளையாட்டு பள்ளிகள் திறக்கப்பட்டன.

அழுது அடம்பிடித்த குழந்தைகள்

 விழுப்புரம் மாவட்டத்தில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. குழந்தைகளுக்காக விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளி, 56 ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகள், 89 மெட்ரிக் பள்ளிகள், 135 மழலையர் தொடக்கப்பள்ளிகள், 8 மழலையர் விளையாட்டு பள்ளிகள் என மொத்தம் 289 பள்ளிகள் கொரோனா பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி திறக்கப்பட்டன. இப்பள்ளிகளில் 11,264 குழந்தைகள் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் அவர்களை பெற்றோர்கள் உற்சாகத்துடன் பள்ளிக்கு அழைத்துச்சென்றனர். சில குழந்தைகள் பள்ளிக்குச்செல்ல மறுத்து அழுது அடம்பிடித்தன. அந்த குழந்தைகளுக்கு சாக்லெட் உள்ளிட்ட தின்பண்டங்களையும், விளையாட்டு பொருட்களையும் வாங்கிக்கொடுத்து சமாதானப்படுத்தி பள்ளியில் கொண்டு சென்று விட்டனர். 2 ஆண்டுகளுக்கு பிறகு பள்ளிகள் திறந்து உற்சாகத்துடன் வந்த குழந்தைகளுக்கு சில பள்ளிகளில் ஆசிரியர்கள் பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்றனர்.

பாதுகாப்பு அம்சங்களுடன்

பள்ளிகள் அனைத்தும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுடனும், பாதுகாப்பு அம்சங்களுடனும் திறக்கப்பட்டன. முககவசம் அணியாமல் வந்த ஒரு சில குழந்தைகளுக்கு பள்ளி ஆசிரியர்கள் முககவசம் வழங்கி அணியச்செய்தனர்.  பின்னர் தெர்மல் ஸ்கேனர் கருவி மூலம் குழந்தைகளின் உடல் வெப்பநிலையை பரிசோதித்த பிறகு வகுப்பறைக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். 

Next Story