கடம்பவனேசுவரர் கோவிலில் மாசித்திருவிழா தேரோட்டம்
குளித்தலை கடம்பவனேசுவரர் கோவிலில் மாசித் திருவிழா தேரோட்டம் நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
குளித்தலை,
கடம்பவனேசுவரர் கோவில்
குளித்தலையில் உள்ள கடம்பவனேசுவரர் கோவில் காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள தேவாரப்பாடல் பெற்ற சிவத்தலங்களில் 2-வது தலமாகும். மிகவும் பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசித்திருவிழா தேரோட்டம் நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 8-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து நாள்தோறும் காலை பல்லக்கில் சுவாமியின் வீதி உலா நடைபெற்று வருகிறது. இரவு நந்தி, யாளி, பூதம், அன்னம், கைலாச, கமல வாகனம், வெள்ளி ரிஷப வாகனம், யானை, கிளி, இந்திர விமானம், குதிரை வாகனம் ஆகியவற்றில் உற்சவ சாமிகளின் வீதி உலா நடைபெற்று வருகிறது.
தேரோட்டம்
விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி உற்சவருக்கு காலை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பலவகை வண்ண பூக்களால் அலங்கரிக்கப்பட்ட சுவாமிகள் திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். பின்னர் பக்தர்களால் வடம்பிடித்து இழுக்கப்பட்ட தேர் கோவிலை சுற்றியுள்ள நான்கு வீதிகள் வழியாக சுற்றிவந்தது. அப்போது ஏராளமான பக்தர்கள் தேங்காய், பூ, பழம் ஆகியவற்றை கொண்டு அர்ச்சனை செய்து சுவாமியை வழிபட்டனர்.
குளித்தலை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். தேர் சென்ற வீதிகளில் பலர் பொதுமக்களுக்கு அன்னதானம், நீர் மோர், பானகம் வழங்கினார்கள்.
தீர்த்தவாரி நிகழ்ச்சி
நேற்று இரவு சுவாமியின் வீதிஉலா நடைபெற்றது. இன்று (வியாழக்கிழமை) குளித்தலை கடம்பந்துறை காவிரி ஆற்றில் தீர்த்தவாரி நிகழ்ச்சியும், இரவு கற்பவிருட்சம், காமதேனு வாகனத்தில் சுவாமி திருவீதிஉலா நடைபெறுகிறது.
Related Tags :
Next Story