மழலையர் பள்ளிகள் 2 ஆண்டுகளுக்கு பின்னர் திறப்பு-உற்சாகத்துடன் பள்ளிக்கு சென்ற குழந்தைகள்


மழலையர் பள்ளிகள் 2 ஆண்டுகளுக்கு பின்னர் திறப்பு-உற்சாகத்துடன் பள்ளிக்கு சென்ற குழந்தைகள்
x
தினத்தந்தி 17 Feb 2022 12:42 AM IST (Updated: 17 Feb 2022 12:42 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா தொற்றால் மூடப்பட்டிருந்த மழலையர் பள்ளிகள் 2 ஆண்டுகளுக்கு பின்னர் திறக்கப்பட்டன. இதனால் குழந்தைகள் உற்சாகத்துடன் பள்ளிக்கு சென்றனர்.

கரூர், 
மழலையர் பள்ளிகள்
தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக மழலையர்களுக்கான நர்சரி பள்ளிகள், விளையாட்டு பள்ளிகள், அங்கன்வாடி, பால்வாடி ஆகியவை கடந்த 2 ஆண்டுகளாக திறக்கப்படாமல் இருந்தன. இந்த நிலையில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்ததால் ஊரடங்கில் பல தளர்வுகள் அளிக்கப்பட்டன. 
அதன்படி, மழலையர் பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள் நேற்று முதல் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி கரூர் மாவட்டத்தில் மழலையர் பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. மேலும் தொடக்கப்பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளும் நேற்று முதல் இயங்க தொடங்கின.
பூங்கொத்து கொடுத்து வரவேற்பு
இதையடுத்து பெற்றோர்கள் ஆர்வத்துடன் தங்களது குழந்தைகளை பள்ளிகளுக்கு அழைத்து வந்து விட்டு சென்றதை காண முடிந்தது. மேலும் பள்ளிகளுக்கு வந்த எல்.கே.ஜி., யு.கே.ஜி. மாணவர்களை பள்ளியின் ஆசிரியர்கள் பூங்கொத்து கொடுத்தும், இனிப்புகள் வழங்கியும் வரவேற்றனர். இருப்பினும் சில அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் முறையாக உத்தரவு வராததால் சில நர்சரி பள்ளிகள் திறக்கப்படவில்லை.
பள்ளிக்கு வந்த குழந்தைகளுக்கு முககவசம், கிருமி நாசினி வழங்கப்பட்டது. தெர்மல் ஸ்கேனர் மூலம் குழந்தைகளின் உடல் வெப்பநிலையும் பரிசோதிக்கப்பட்டது. மேலும் பள்ளிகளில் போதிய இடைவெளியுடன் அவர்கள் உட்கார வைக்கப்பட்டனர். பெரும்பாலான குழந்தைகள் பள்ளிக்கு செல்ல மறுத்து அழுது புரண்டதை காண முடிந்தது. பெற்றோர் அவர்களை ஏமாற்றி பள்ளியில் விட்டுச்சென்றனர். சில குழந்தைகள் மகிழ்ச்சியுடன் பள்ளிக்கு சென்றனர்.
குழந்தைகளின் எதிர்காலம்...
இதுகுறித்து ராயனூரை சேர்ந்த ராதிகா கணேசன் கூறியதாவது:- இன்று (நேற்று) பள்ளி திறக்கப்படும் என்பதால் முதல் நாளே பள்ளிக்கு செல்ல வேண்டும் என்ற ஆவலில் எனது மகன் இருந்தான்.  2 ஆண்டுகளுக்கு பிறகு குழந்தையை பள்ளிக்கு அழைத்து வந்து விடுவதில் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.
பாரதிதாசன் நகரை சேர்ந்த ஜெயப்பிரகாஷ்:- யு.கே.ஜி. பயிலும் தனது மகனை பள்ளிக்கு அழைத்து வர எனது குடும்பத்துடன் வந்தேன். கொரோனா தொற்றின் காரணமாக கடந்த பல மாதங்களாக மழலையர் பள்ளிகள் அடைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது நோய்தொற்று குறைந்து பள்ளிகள் திறக்கப்படுவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அதை போன்று எனது மகனும் உற்சாகத்துடன் பள்ளிக்கு கிளம்பி சென்றதை காணும் போது மிகவும் சந்தோஷமாக உள்ளது என கூறினார்.
ஜீவா நகரை சேர்ந்த பரிமளாதேவி:- கடந்த 2 ஆண்டுகளாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்ததால் குழந்தைகளின் எதிர்காலம் குறித்தும், அவர்களது கல்வி குறித்தும் மிகவும் கவலையடைந்தேன். தற்போது நோய் தொற்று குறைந்து பள்ளிகள் திறக்கப்பட்டதால் மனதளவில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. வரும் காலங்களில் நோய்த்தொற்று பரவாமல் தொடர்ந்து பள்ளிகள் உள்ளிட்ட அனைத்தும் செயல்பட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story