தினத்தந்திபுகார் பெட்டி
தஞ்சை மாவட்டத்தில் உள்ள குறைகள் புகார் பெட்டியில் கூறப்பட்டுள்ளது.
நாய்கள் தொல்லை
தஞ்சை அருளானந்தநகர் பகுதியில் நாய்கள் அதிகளவில் சுற்றித்திரிகிறது. இவை அந்த வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகளை துரத்தி செல்கிறது. இதனால் பொதுமக்கள் அந்தப்பகுதியில் அச்சத்துடன் நடந்து சென்று வருகின்றனர். மேலும் அந்த வழியாக செல்லும் கார், இருசக்கர வாகனங்களையும் நாய்கள் துரத்தி செல்கின்றன. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துக்களில் சிக்கிக்கொள்கின்றனர். மேலும் சாலையில் நாய்கள் கூட்டமாக சுற்றி திரிவதால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
கிராமமக்கள், அருளானந்த நகர்.
போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்கள்
தஞ்சை ராமநாதன் ரவுண்டானா முதல் மேரீஸ்கார்னர் வழியாக செல்லும் சாலையை தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் மேற்கண்ட வழித்தடத்தில் உள்ள சாலையின் இருபுறமும் போக்குவரத்துக்கு இடையூறாக இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் நிறுத்தப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். மேலும், போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்தப்படுவதால் அந்தப் பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட சாலையின் இருபுறமும் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்தப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுப்பார்களா?
-பொதுமக்கள், தஞ்சை.
சேறும், சகதியுமான சாலை
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா ஊரணிபுரத்தில் உள்ள காமராஜ் நகர் அரசு பள்ளிக்கு செல்லும் சாலை பராமரிப்பின்றி குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. குறிப்பாக மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது.இதன் காரணமாக சாலை சேறும், சகதியுமாக மாறி விடுகிறது. இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் சாலையில் நடந்து செல்ல முடியாத சூழல் ஏற்படுகிறது.மேலும் சாலையில் மழைநீர் தேங்கி கிடப்பதால் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகிறது.இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மாணவ-மாணவிகளின் நலன் கருதி மேற்கண்ட பகுதியில் உள்ள குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?
-முருகேசன், ஒரத்தநாடு.
Related Tags :
Next Story