கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு தயாராகும் வாக்கு எண்ணும் மையங்கள்


கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு தயாராகும் வாக்கு எண்ணும் மையங்கள்
x
தினத்தந்தி 17 Feb 2022 1:53 AM IST (Updated: 17 Feb 2022 1:53 AM IST)
t-max-icont-min-icon

வருகிற 19-ந் தேதி உள்ளாட்சி தேர்தல் நடப்பதுடன் 22-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. இதற்காக கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு வாக்கு எண்ணும் மையங்கள் தயாராகி வருகிறது.

தஞ்சாவூர்:
வருகிற 19-ந் தேதி உள்ளாட்சி தேர்தல் நடப்பதுடன் 22-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. இதற்காக கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு வாக்கு எண்ணும் மையங்கள் தயாராகி வருகிறது.
வாக்கு எண்ணிக்கை
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந்தேதி நடக்கிறது. இதற்கான பிரசாரம் இன்று (வியாழக்கிழமை) மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. 19-ந் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை 22-ந் தேதி நடக்கிறது.
வாக்குப்பதிவு முடிவடைந்ததும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு எடுத்து செல்லப்படும். வாக்கு எண்ணிக்கை 22-ந் தேதி நடக்கிறது. அதன்படி தஞ்சை மாவட்டத்தில் 7 இடங்களில் வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தயாராகும் மையங்கள்
தஞ்சை மாநகராட்சியில் 51 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் பதிவாகும் வாக்குகள் தஞ்சை மன்னர் சரபோஜி அரசு கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் எண்ணப்படுகிறது. அதேபோல் வல்லம், ஒரத்தநாடு, திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி, மேலதிருப்பூந்துருத்தி, மதுக்கூர், அய்யம்பேட்டை, மெலட்டூர், அம்மாபேட்டை ஆகிய பேரூராட்சிகளில் பதிவாகும் வாக்குகள் தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் எண்ணப்படுகிறது.
இதற்காக வாக்கு எண்ணும் மையம் தயாராகி வருகிறது. குந்தவைநாச்சியார் அரசு மகளிர் கல்லூரியில் 3 அறைகளில் வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. ஒரே நேரத்தில் 3 பேரூராட்சிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணும் அறையில் வாக்கு எண்ணிக்கைக்காக 3 மேஜைகள் போடப்பட்டுள்ளன. மேலும் கம்புகளாலும், கம்பி வலைகளாலும் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு, கட்சிகளின் முகவர்கள் வாக்கு எண்ணிக்கையை கவனிப்பதற்காக இடவசதி அளிக்கப்பட்டுள்ளன.
கண்காணிப்பு கேமரா
வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்க ஒவ்வொரு அறையிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் அறைகளுக்கு வெளியேயும் பல இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. ஒரு அறையில் இருந்து மற்றொரு அறைக்கு யாரும் சென்றுவிடாத அளவுக்கு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கக்கூடிய அறைகளில் இருந்த ஜன்னல்கள் அடைக்கப்பட்டுள்ளன.
இது குறித்து அதிகாரிகள் கூறும்போது, குந்தவைநாச்சியார் அரசு மகளிர் கல்லூரியில் 9 பேரூராட்சிகளில் பதிவாகும் வாக்குகள் எண்ணப்படுகின்றன. அதிகபட்சமாக அய்யம்பேட்டை பேரூராட்சியில் பதிவாகும் வாக்குகள் 20 சுற்றுகளாக எண்ணப்பட உள்ளது. மதுக்கூர் பேரூராட்சியில் பதிவாகும் வாக்குகள் 18 சுற்றுகளாகவும், வல்லம் பேரூராட்சியில் பதிவாகும் வாக்குகள் 17 சுற்றுகளாகவும், பிற பேரூராட்சிகளில் பதிவாகும் வாக்குகள் 15 சுற்றுகளாகவும் எண்ணப்பட உள்ளது. இதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என்றார்.
புற்கள் அகற்றும் பணி
மேலும் கல்லூரி வளாகத்தில் வளர்ந்திருந்த புற்களை அகற்றும் பணியில் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டனர். இதேபோல் பிற வாக்கு எண்ணும் மையங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு தயார் செய்யப்பட்டு வருகிறது. கும்பகோணம் மாநகராட்சியில் பதிவாகும் வாக்குகள் கும்பகோணம் கருப்பூர் ரோடு அரசு கலைக்கல்லூரியிலும், அதிரம்பட்டினம் நகராட்சியில் பதிவாகும் வாக்குகள் அதிராம்பட்டினம் காதர் முகைதீன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும் எண்ணப்படுகிறது.
பட்டுகோட்டை நகராட்சியில் பதிவாகும் வாக்குகள் பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், ஆடுதுறை, திருபுவனம், திருவிடைமருதூர், திருநாகேஸ்வரம், திருப்பனந்தாள், வேப்பத்தூர், சோழபுரம், சுவாமிமலை, பாபநாசம் ஆகிய பேரூராட்சிகளில் பதிவாகும் வாக்குகள் கும்பகோணம்- மயிலாடுதுறை சாலை நால் ரோடு அருகில் உள்ள லிட்டில் பிளவர் மேல்நிலைப்பள்ளியிலும், பேராவூரணி, பெருமகளூர் ஆகிய பேரூராட்சிகளில் பதிவாகும் வாக்குகள் பேராவூரணி- பட்டுக்கோட்டை சாலையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் எண்ணப்பட உள்ளன.

Next Story