2 ஆண்டுகளுக்கு பிறகு நர்சரி பள்ளிகள் திறப்பு
தஞ்சை மாவட்டத்தில் 2 ஆண்டுகளுக்கு பிறகு நர்சரி பள்ளிகள் திறக்கப்பட்டதால் பள்ளிகளுக்கு வந்த குழந்தைகளுக்கு இனிப்பு, பலூன்களை ஆசிரியைகள் வழங்கி வரவேற்றனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டத்தில் 2 ஆண்டுகளுக்கு பிறகு நர்சரி பள்ளிகள் திறக்கப்பட்டதால் பள்ளிகளுக்கு வந்த குழந்தைகளுக்கு இனிப்பு, பலூன்களை ஆசிரியைகள் வழங்கி வரவேற்றனர்.
பல்வேறு தளர்வுகள்
தமிழகத்தில் கொரோனா தொற்று 3-வது அலையின் தாக்கம் அதிகமாக இருந்ததால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பள்ளிகள் எல்லாம் மூடப்பட்டன. கொரோனா 3-வது அலையின் தாக்கம் குறைந்த பிறகு கடந்த 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி பள்ளிகள் திறக்கப்பட்டு, வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
ஆனால் நர்சரி மற்றும் மழலையர் பள்ளிகள் கடந்த 2 ஆண்டுகளாக திறக்கப்படவில்லை. இந்தநிலையில் நர்சரி மற்றும் மழலையர் பள்ளிகளையும் திறக்க அனுமதி அளிக்க வேண்டும் என பள்ளி நிர்வாகத்தினரும், பெற்றோர்களும் கோரிக்கை வைத்தனர். தற்போது கொரோனா தொற்று குறைந்துள்ள நிலையில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
நர்சரி பள்ளிகள் திறப்பு
நேற்று முதல் பெரும்பாலான கட்டுப்பாடுகளுக்கு அளிக்கப்பட்ட தளர்வுகள் அமலுக்கு வந்தன. அதன்படி கடந்த 2 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்தன நர்சரி, விளையாட்டு பள்ளிகள், மழலையர் காப்பகங்கள், தொடக்கப்பள்ளிகள் ஆகியவற்றில் நடத்தப்படும் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் நேற்று திறக்கப்பட்டன.
தஞ்சை மாவட்டத்தில் நர்சரி, மழலையர் பள்ளிகள் திறக்கப்பட்டதால் உற்சாக துள்ளலுடன் குழந்தைகள் பள்ளிக்கு வந்தனர். தங்களது குழந்தைகளை பெற்றோர்கள் அழைத்து வந்திருந்தனர். பள்ளிக்கு வந்த குழந்தைகளை உற்சாகப்படுத்தும் வகையில் அவர்களுக்கு ஆசிரியர்கள், ஆசிரியைகள் இனிப்பு, பலூன் வழங்கி வரவேற்றனர். பல பள்ளிகளில் மழலை செல்வங்களுக்கு ரோஜாப்பூ வழங்கப்பட்டது. வகுப்பறையில் போதுமான இடைவெளியுடன் இருக்கைகள் அமைக்கப்பட்டிருந்தன.
குழந்தைகளுக்கு பல்வேறு விளையாட்டுக்களை சொல்லி கொடுத்த ஆசிரியர்கள், கதைகளையும் கூறினர். முதல்நாள் என்பதால் குழந்தைகளுக்கு ½ நாள் மட்டுமே வகுப்புகள் நடைபெற்றன. பெரும்பாலான பள்ளிகளில் பெற்றோர்கள் குழந்தைகளை விட்டுவிட்டு வீடுகளுக்கு செல்லாமல் வெளியே அமர்ந்திருந்தனர். வகுப்புகள் முடிந்தவுடன் பெற்றோர்கள் ஓடி சென்று தங்கள் குழந்தைகளை கையில் தூக்கி முத்தமிட்டு மகிழ்ந்தனர்.
Related Tags :
Next Story