மேம்பாலத்தில் தாமதமாக எரியும் மின்விளக்குகள்
தஞ்சை சாந்தப்பிள்ளைகேட் மேம்பாலத்தில் மின்விளக்குகள் தாமதமாக எரிவதை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை சாந்தப்பிள்ளைகேட் மேம்பாலத்தில் மின்விளக்குகள் தாமதமாக எரிவதை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
ரெயில்வே மேம்பாலம்
தஞ்சை சாந்தப்பிள்ளைகேட் பகுதியில் ரெயில்வே மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. தஞ்சை புதிய பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு நாகை, திருவாரூர், வேளாங்கண்ணி, காரைக்கால், பட்டுக்கோட்டை, பேராவூரணி, திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, வேதாரண்யம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு செல்லக்கூடிய அரசு மற்றும் தனியார் பஸ்கள் இந்த மேம்பாலத்தின் வழியாக சென்று வருகின்றன.
மேலும் கார்கள், வேன்கள், இருசக்கர வாகனங்களில் செல்பவர்களும் ஏராளமானோர் இந்த மேம்பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர். அதுமட்டுமின்றி மேரீஸ்கார்னர் பகுதியில் இருந்து வண்டிக்காரத்தெரு பகுதிகளுக்கு செல்லக்கூடிய மக்களும் இந்த பாலத்தின் வழியாக நடந்து செல்கின்றனர். இப்படி பல்வேறு வகையில் பயன் அளிக்கக்கூடிய இந்த மேம்பாலத்தில் இரவு நேரத்தில் மக்கள் சிரமமின்றி செல்வதற்கு வசதியாக மின்விளக்குகள் ஆங்காங்கே பொருத்தப்பட்டுள்ளன.
மக்கள் குற்றச்சாட்டு
இந்த மின்விளக்குகள் முன்பெல்லாம் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை ஒளிர்ந்து கொண்டிருந்தது. இதனால் இந்த மேம்பாலத்தின் வழியாக வாகனங்களில் செல்பவர்களும், நடந்து செல்பவர்களும் எந்தவித அச்சமும் இன்றி சென்று வந்தனர். ஆனால் கடந்த சில நாட்களாக மாலை 6 மணிக்கு எரிய வேண்டிய மின்விளக்குகள் இரவு 10 மணிக்கு மேல் தான் எரிய தொடங்குகிறது. அதுவும் காலை 10 மணி வரை எரிவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதனால் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மேம்பாலம் இருள்சூழ்ந்து காணப்படுகிறது. வாகனங்களில் செல்பவர்களும், நடந்து செல்பவர்களும் ஒருவித அச்சத்துடன் தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை மின்விளக்குள் எரிய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாகும். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, மின்விளக்குகள் இந்த நேரத்தில் எரிய வேண்டும் என செட்டிங் செய்யப்பட்டு இருக்கிறது. அது மாறிவிட்டதால் மாலை 6 மணிக்கு பதிலாக இரவு 10 மணி முதல் மின்விளக்குள் எரிய தொடங்குகிறது. இதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
Related Tags :
Next Story