பெங்களூருவில் பி.எம்.டி.சி. பஸ்களில் கட்டணம் அதிகம்; இலவச பயணத்துக்கு அனுமதிக்க பெண்கள் கோரிக்கை


பெங்களூருவில் பி.எம்.டி.சி. பஸ்களில் கட்டணம் அதிகம்; இலவச பயணத்துக்கு அனுமதிக்க பெண்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 17 Feb 2022 3:04 AM IST (Updated: 17 Feb 2022 3:04 AM IST)
t-max-icont-min-icon

பிற நகரங்களை காட்டிலும், பெங்களூருவில் நகர பஸ்களின் கட்டணம் அதிகமாக இருப்பது ஆய்வில் தெரியவந்து உள்ளது. எனவே இலவச பயணத்துக்கு அனுமதி வழங்க கோரி பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பெங்களூரு: பிற நகரங்களை காட்டிலும், பெங்களூருவில் நகர பஸ்களின் கட்டணம் அதிகமாக இருப்பது ஆய்வில் தெரியவந்து உள்ளது. எனவே இலவச பயணத்துக்கு அனுமதி வழங்க கோரி பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

6 ஆயிரம் பஸ்கள்

பெங்களூரு மெட்ரோபாலிட்டன் போக்குவரத்து கழகம் (பி.எம்.டி.சி.) சார்பில் பெங்களூரு நகர் மற்றும் கடைக்கோடி பகுதிகள் வரை பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. பி.எம்.டி.சி. சார்பில் தினமும் சுமார் 6 ஆயிரம் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. 

இந்த பஸ்களில் தினமும் 35 லட்சம் பயணிகள் பயணம் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் நகர பஸ்களின் கட்டணம் குறித்து பஸ் பிரயாணிகர வேதிகே என்ற அமைப்பு ஒரு ஆய்வு நடத்தி இருந்தது. அந்த ஆய்வில் பிற நகரங்களை காட்டிலும் பெங்களூரு பி.எம்.டி.சி.பஸ்களில் கட்டணம் அதிகம் என்பது தெரியவந்து உள்ளது.

அதாவது பி.எம்.டி.சி. பஸ்களில் 5 கிலோ மீட்டர் தூரம் பயணிக்க பயணிகளிடம் இருந்து ரூ.15-ம், 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.20-ம், 15 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.25-ம் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது. ஆனால் மராட்டிய மாநிலம் புனேயில் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.10-ம், 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.15-ம், 15 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.20-ம் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

இலவச பயணம்

தலைநகர் டெல்லியில் 5 மற்றும் 10 கிலோ மீட்டர் தூரங்களுக்கு ரூ.10 தான் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 15 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.15 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. மும்பையில் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.5-ம், 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.10-ம், 15 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.15-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. சென்னையில் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.6-ம், 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.9-ம், 15 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.14-ம் தான் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

பெங்களூருவில் பி.எம்.டி.சி. பஸ்களில் கட்டணம் அதிகமாக இருப்பது பற்றி மாநகராட்சி துப்புரவு ஊழியரான லட்சுமி என்ற பெண் கூறும்போது, நான் பஸ் பயணத்திற்காக மாதந்தோறும் ரூ.1,050 வரை செலவு செய்கிறேன். எனது குழந்தைகள் கல்வி செலவு, பால், உணவுக்காகவும் அதிக செலவு ஆகிறது.

 இப்படி செலவு ஆகும் போது பஸ் கட்டணத்தை குறைந்தால் நன்றாக இருக்கும். இல்லாவிட்டால் தமிழ்நாட்டை போல பெண்களுக்கு நகர பஸ்களில் இலவச பயணத்தை அமல்படுத்த வேண்டும் என்றார். மேலும் சில பெண்களும் நகர பஸ்களில் பெண்களுக்கு கட்டணமில்லா பயணத்தை அமல்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளனர்.

Next Story