402 வார்டு உறுப்பினர் பதவிக்கு நாளை(சனிக்கிழமை) வாக்குப்பதிவு


402 வார்டு உறுப்பினர் பதவிக்கு  நாளை(சனிக்கிழமை) வாக்குப்பதிவு
x
தினத்தந்தி 17 Feb 2022 6:27 PM IST (Updated: 17 Feb 2022 6:27 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 402 நகர்ப்புற வார்டு உறுப்பினர் பதவிக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நாளை (சனிக்கிழமை) நடக்கிறது

தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 402 நகர்ப்புற வார்டு உறுப்பினர் பதவிக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. இதை முன்னிட்டு 2,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
உள்ளாட்சி தேர்தல்
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகள், கோவில்பட்டி, திருச்செந்தூர், காயல்பட்டினம் ஆகிய 3 நகராட்சிகளில் உள்ள 81 வார்டுகள், கடம்பூர் தவிர 17 பேரூராட்சிகளில் உள்ள 261 வார்டுகள் ஆக மொத்தம் 402 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. 402 பதவிகளுக்கு மொத்தம் 1950 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்கள் கடந்த ஒரு வாரமாக வீடு, வீடாக சென்று தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த தேர்தலில் மாநகராட்சி பகுதியில் 3 லட்சத்து 26 ஆயிரத்து 453 வாக்காளர்களும், நகராட்சிகளில் 1 லட்சத்து 46 ஆயிரத்து 929 வாக்காளர்களும், பேரூராட்சிகளில் 1 லட்சத்து 78 ஆயிரத்து 311 வாக்காளர்களும் மொத்தம் 3 லட்சத்து 18 ஆயிரத்து 12 ஆண் வாக்காளர்கள், 3 லட்சத்து 33 ஆயிரத்து 566 பெண் வாக்காளர்கள், 115 திருநங்கைகள் மொத்தம் 6 லட்சத்து 51 ஆயிரத்து 693 பேர் வாக்களிக்க உள்ளனர்.
வாக்குச்சாவடி
இவர்கள் வாக்களிப்பதற்கு வசதியாக மாநகராட்சி பகுதியில் 319 வாக்குச்சாவடிகளும், நகராட்சிகளில் 157 வாக்குச்சாவடிகளும், பேரூராட்சிகளில் 274 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த வாக்குச்சாவடிகளில் பணியாற்றுவதற்காக 3 ஆயிரத்து 600 பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது. மாவட்டத்தில் உள்ள 174 பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் கண்காணிப்புக்காக 211 நுண்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இந்த வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமிரா மற்றும் வெப் கேமிரா பொருத்தப்பட்டு உள்ளது.
வாக்குச்சாவடிக்கு தேவையான அனைத்து பொருட்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. இந்த பொருட்கள் மற்றும் வாக்குப்பதிவு எந்திரத்தை வாக்குச்சாவடிகளுக்கு கொண்டு செல்வதற்காக மாவட்டம் முழுவதும் மொத்தம் 48 மண்டல அலுவலர்கள் தலைமையிலான குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த மண்டலக்குழுவினர் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை முதல் வாக்குப்பெட்டிகளை வாக்குச்சாவடிகளுக்கு கொண்டு செல்ல உள்ளனர். நாளை (சனிக்கிழமை) வாக்குப்பதிவு முடிவடைந்த பிறகு வாக்குப்பதிவு எந்திரத்தை வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு கொண்டு சேர்க்க உள்ளனர்.
மண்டல குழு
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் 16 மண்டல குழுவும், கோவில்பட்டியில் 7 குழுவும், காயல்பட்டினத்தில் 3 குழுவும், திருச்செந்தூர் நகராட்சியில் 3 குழுவும், ஆறுமுகநேரி, நாசரேத் பேரூராட்சிக்கு தலா 2 குழுவும், ஆழ்வார்திருநகரி, ஆத்தூர், ஏரல், எட்டயபுரம், கழுகுமலை, கானம், கயத்தார், பெருங்குளம், புதூர், சாத்தான்குளம், சாயர்புரம், ஸ்ரீவைகுண்டம், தென்திருப்பேரை, உடன்குடி, விளாத்திகுளம் ஆகிய பேரூராட்சிகளுக்கு தலா ஒரு குழுவும் ஆக மொத்தம் 48 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவில் இடம் பெற்று உள்ள போலீசாரிடம் அதற்கான வாகனங்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் நேற்று ஒப்படைத்தார்.
அச்சமின்றி வாக்களிக்கலாம்
தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு கூறும் போது, தூத்துக்குடி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க ஏதுவாக 3 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் மேற்பார்வயைில் 13 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 2 ஆயிரத்து 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். ஊர்க்காவல் படையை சேர்ந்த 240 பேர் மற்றும் சிறப்பு பிரிவு போலீசாரும் பணியமர்த்தப்படுகின்றனர். அவர்களுக்கான பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன. எனவே வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை நேர்மையான முறையில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும். யாராவது வன்முறையில் ஈடுபட்டால் சட்டப்படி கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
கலந்து கொண்டவர்கள்
நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட தலைமையிடத்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், சைபர் குற்ற பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன், ஆயுதப்படை துணை போலீஸ் சூப்பிரண்டு கண்ணபிரான், துணை போலீஸ் சூப்பிரண்டு (பயிற்சி) ஷாமளாதேவி, மாவட்ட தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து, தென்பாகம் குற்ற பிரிவு இன்ஸ்பெக்டர் ரேனியஸ் ஜேசுபாதம், ஆயுதப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுடலைமுத்து மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

Next Story