மான்களின் தாகம் தீர்க்க தொட்டிகளில் தண்ணீர்
மான்களின் தாகம் தீர்க்க தொட்டிகளில் தண்ணீர்
அவினாசி புதுப்பாளையம் வனப்பகுதியில் மான்களுக்காக தொட்டிகளில் தண்ணீர் நிரப்பி வனத்துறையினர் கண்காணித்து வருகிறார்கள்.
தொட்டிகளில் தண்ணீர்
திருப்பூர் வனசரகத்துக்கு உட்பட்ட அவினாசி புதுப்பாளையம், கோதபாளையம் பகுதிகளில் 1,500-க்கும் மேற்பட்ட மான்கள் வசித்து வருகின்றன. கோடைகாலம் தொடங்க உள்ள நிலையில் தற்போதே தண்ணீரை தேடி மான்கள் வனப்பகுதியில் இருந்து வெளியே வர தொடங்கியுள்ளன. நேற்று முன்தினம் வஞ்சிப்பாளையம் அருகே குட்டியுடன் 2 மான்கள் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரெயிலில் அடிபட்டு பலியாயின.
இதைத்தொடர்ந்து திருப்பூர் மாவட்ட வன அதிகாரி தேஜஸ்வி அறிவுறுத்தலின் பேரில் திருப்பூர் வன சரக அதிகாரி செந்தில்குமார் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு மான்கள் வசிக்கும் பகுதியில் உள்ள தொட்டிகளில் லாரிகள் மூலமாக தண்ணீர் நிரப்பும் பணி நேற்று தொடங்கியது. புதுப்பாளையம் பகுதியில் உள்ள 2 பெரிய தொட்டிகளில் தண்ணீர் நிரப்பப்பட்டது. இதன் மூலமாக மான்கள் வனப்பகுதியை விட்டு வெளியே வராமல் தடுப்பதற்கு முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.
24 மணி நேரம் கண்காணிப்பு
இதுகுறித்து வனசரக அதிகாரி செந்தில்குமார் கூறும்போது, 1,500-க்கும் மேற்பட்ட மான்கள் இங்கு உள்ளன. அவை சுற்றுப்புற பகுதிகளில் பரவலாக வசித்து வருகின்றன. வெயில் அதிகரித்துள்ளதால் தண்ணீரை தேடி வரும்போது நாய்கள் துரத்துவது, ரோட்டை கடக்கும்போது வாகனங்களில் அடிபட்டு பலியாவது, வேட்டையாடுவது போன்ற சம்பவங்கள் ஏற்படும். இதை தவிர்க்க தனியாக ஊழியர்கள் நியமிக்கப்பட்டு வனப்பகுதியில் 24 மணி நேரமும் கண்காணிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
புதுப்பாளையம் பகுதியில் கூடுதல் இடங்களில் தண்ணீர் தொட்டி அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மான்கள் அடிபட்டால் உடனடியாக சென்று முதலுதவி சிகிச்சை அளிக்கும் வகையில் கால்நடை மருத்துவர்களையும் தயார்படுத்தி வைத்துள்ளோம் என்றார்.
Related Tags :
Next Story