குளமங்கலம் அய்யனார் கோவிலில் மாசிமக திருவிழா
குளமங்கலம் பெருங்காரையடி மிண்ட அய்யனார் கோவிலில் மாசிமக திருவிழா நடைபெற்றது. இதில், ஆசியாவிலேயே உயரமான குதிரை சிலைக்கு காகிதப்பூ மாலைகள் குவிந்தன.
கீரமங்கலம்,
மாசிமக திருவிழா
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே உள்ள குளமங்கலம் கிராமத்தில் வில்லுனி ஆற்றங்கரையில் பிரசித்தி பெற்ற பெருங்காரையடி மிண்ட அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மாசிமக திருவிழா 2 நாட்கள் நடைபெறுவது வழக்கம். விழாவில் கோவிலில் உள்ள ஆசியாவிலேயே உயரமான 33 அடி உயரம் கொண்ட குதிரை சிலைக்கு அதே உயரத்தில் காகிதப்பூ மாலை அணிவிப்பதும், மறுநாள் இரவு தெப்ப திருவிழாவும் தான் சிறப்பு.
இந்த பிரமாண்ட குதிரை சிலைக்கு பக்தர்கள் காணிக்கையாக அணிவிக்கும் காகிதப்பூ மாலைகள் கீரமங்கலம், கொத்தமங்கலம், குளமங்கலம், திருநாளூர், மறமடக்கி, ஆவணத்தான்கோட்டை, திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் கடந்த ஒரு மாதமாக மாலைகள் கட்டப்பட்டு வந்தன.
சிறப்பு வழிபாடு
இந்த ஆண்டு கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசின் வழிகாட்டு முறைகளை கடைபிடிக்கவும், கூட்ட நெரிசலை தவிர்க்கவும் குதிரை சிலைக்கு ஒரு நாள் முன்னதாக மாலைகள் அணிவிக்க அதிகாரிகள் மற்றும் கிராம மக்கள் முடிவு செய்தனர். அதன்படி நேற்று முன்தினம் காலை 10 மணிக்கு கிராமத்தின் சார்பில் சிறப்பு வழிபாடுகள் செய்து தீபாராதனையுடன் முதல் மாலையாக மலர் மாலை அணிவிக்கப்பட்டது. இதில், அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டார்.
அதனை தொடர்ந்து நீண்ட வரிசையில் வாகனங்களில் ஏற்றிவரப்பட்ட காகிதப்பூ மாலைகளை பக்தர்கள் நேர்த்திக்கடனாக அணிவித்தனர். முதல் நாளிலேயே நூற்றுக்கணக்கான மாலைகள் குதிரை சிலைக்கு குவிந்தது.
பால்குடம், காவடி
கூட்ட நெரிசலை தவிர்க்க நேற்று முன்தினம் முதல் மாலைகள் அணிவிக்கப்பட்டதுடன் நேற்றும் மாலைகள் அணிவிக்கப்பட்டன. மேலும் ஏராளமான பக்தர்கள் பால்குடம், காவடி, கரும்பில் தொட்டில் கட்டி குழந்தைகளை தூக்குதல் போன்ற நிகழ்ச்சிகளும் நடந்தது. அதேபோல் கீரமங்கலம், பனங்குளம், குளமங்கலம் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டன. சிறப்பு பஸ்கள், தண்ணீர் பந்தல்கள், மருத்துவ வசதி போன்ற வசதிகள் செய்யப்பட்டதுடன் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் போலீசார் கண்காணித்து வந்தனர். தீயணைப்பு வாகனம், ஆம்புலன்ஸ் போன்றவை தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தன.
அய்யனார் கோவிலுக்கு வாகனங்களில் மாலைகள் ஏற்றி செல்லும் பக்தர்களுக்கு கீரமங்கலம் மேற்கு பகுதி இஸ்லாமிய இளைஞர்கள் தண்ணீர் பாட்டில்களை வழங்கினார்கள். இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
சங்கிலி திருட்டு
கோவிலில் அன்னதானம் வாங்கிக்கொண்டு வெளியே வந்த ஆவுடையார்கோயில் தாலுகா ஒக்கூர் கிராமத்தை சேர்ந்த பொய்யாமொழி மனைவி அர்ச்சனாதேவி (வயது 27) தனது 5 பவுன் சங்கிலியை காணவில்லை என்று கதறி அழுதார். அதேபோல் ராஜேந்திரபுரம் மாணிக்கம் மனைவி அம்பிகா (40) என்பவரும் தனது 5 பவுன் சங்கிலியை காணவில்லை என்று கதறி அழுதார். இந்த சம்பவம் குறித்து கீரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story