தேர்தல் நடத்தை விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும்
சேலம் மாநகராட்சியில் தேர்தல் நடத்தை விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும் என மண்டல அலுவலர்களுக்கு ஆணையாளர் கிறிஸ்துராஜ் அறிவுரை வழங்கினார்.
சேலம்:-
சேலம் மாநகராட்சியில் தேர்தல் நடத்தை விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும் என மண்டல அலுவலர்களுக்கு ஆணையாளர் கிறிஸ்துராஜ் அறிவுரை வழங்கினார்.
ஆலோசனை கூட்டம்
சேலம் மாநகராட்சி தேர்தலை முன்னிட்டு 60 மண்டல அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான ஆலோசனை கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில், மாநகராட்சி ஆணையாளரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான கிறிஸ்துராஜ் தலைமை தாங்கி பேசியதாவது:-
மண்டல அலுவலர்களின் பணி மிகவும் முக்கியமானதாகும். வாக்குச்சாவடிக்கு தேவையான பொருட்களின் பட்டியல்களை சரிபார்த்து வாக்குச்சாவடி அலுவலர்களிடம் வழங்க வேண்டும். வாக்குச்சாவடி வாரியாக வழங்கப்படும் வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகளின் வரிசை எண்ணை சரிபார்த்து அந்த வாக்குச்சாவடிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் தானா? என்பதை உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும்.
வாக்குப்பதிவு எந்திரங்கள்
வாக்குப்பதிவுக்கு முந்தய நாள் இரவு அனைத்து வாக்குப்பதிவு அலுவலர்களும் வருகை புரிந்துள்ளார்களா? என்றும், வாக்குச்சாவடியில் மேற்கொள்ளப்பட வேண்டிய அடிப்படை வசதிகள், நுண் பார்வையாளர்கள் வருகை போன்றவற்றை உறுதி செய்ய வேண்டும். மேலும், வெப்கேமரா சரியான இடத்தில் அனைத்து வாக்குப்பதிவு நடைமுறைகளையும் கண்காணிக்கும் வகையில் பொருத்துப்பட்டுள்ளதா? என்பதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
வாக்குச்சாவடிக்கு தேவையான பொருட்கள் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், இருப்பு வாக்குப்பதிவு எந்திரங்கள் ஆகியவற்றை வாக்குச்சாவடி வாரியாக சரிபார்த்து பெற்றுக்கொள்ள வேண்டும். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு தொடங்குவதற்கு 1 மணி நேரத்திற்கு முன்னதாக முகவர்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு தொடங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
முன்னேற்பாடு பணிகள்
வாக்குப்பதிவு அன்று சரியாக காலை 7 மணிக்கு அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு தொடங்கியதை கண்காணித்து உறுதிப்படுத்த வேண்டும். வாக்குப்பதிவு தொடங்கியதும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் முறையாக செயல்படுகிறதா? என்பதை நேரில் சென்று பார்வையிட வேண்டும்.
வாக்குப்பதிவு முடிந்தவுடன் எந்த வாக்குச்சாவடியில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை பூட்டி சீல் வைத்து, எந்த வழியில் வாக்கு எண்ணும் மையத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதை திட்டமிட்டு அதனை செயல்படுத்த வேண்டும். இதுபோன்ற முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ளும் வகையில் உடனடியாக உங்களுக்கு உரிய வாக்குச்சாவடிகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டு அனைத்தும் சரியாக உள்ளதா? என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
நடத்தை விதிகளை
மூன்றாம் கட்டமாக நடைபெறும் பயிற்சி மையத்தில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு நியமன ஆணைகளை வழங்கிட வேண்டும். இதுபோன்ற தேர்தல் நடத்தை விதிகளை முறையாக பின்பற்றி அனைவரும் கவனமுடன் பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதனிடையே, வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் தேவையான பொருட்கள் கொண்டு செல்லும் வகையில் 60 மண்டல அலுவலர்களுக்கு 60 வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அந்த வாகனங்களை நேற்று ஆணையாளர் கிறிஸ்துராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Related Tags :
Next Story