18 வயதுக்கு மேற்பட்டவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதில் 50 சதவீத இலக்கை எட்டியுள்ளோம்;தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பேச்சு
18 வயதுக்கு மேற்பட்டவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதில் 50 சதவீத இலக்கை எட்டியுள்ளோம் என தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
நாகர்கோவில்,
18 வயதுக்கு மேற்பட்டவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதில் 50 சதவீத இலக்கை எட்டியுள்ளோம் என தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
விழிப்புணர்வு நிகழ்ச்சி
'எனது வாக்கு எனது எதிர்காலம், ஒரு வாக்கின் வலிமை' என்ற தலைப்பில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி குமரி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி கலையரங்கில் நேற்று நடந்தது.
விழாவுக்கு மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான அரவிந்த் தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சியை பார்வையிட்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-
32 லட்சம் அடையாள அட்டைகள்
இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதில் 50 சதவீத இலக்கை தான் அடைந்துள்ளோம். இதனை 100 சதவீதமாக மாற்றும் விதமாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக ஆண்டுக்கு 2 மாதம் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. முந்தைய காலகட்டங்களில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வாக்காளர் அடையாள அட்டையை வழங்கி வந்தனர். தற்போது வாக்காளர் பெயர் சேர்த்த உடன் ஒரு மாதகாலத்தில் அடையாள அட்டை கிடைக்கும்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கடந்த சட்டசபை தேர்தலில் தமிழகம் முழுவதும் விரைவு தபால் மூலம் 32 லட்சம் வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கியுள்ளதை, அகில இந்திய தேர்தல் ஆணையம் வெகுவாக பாராட்டியுள்ளது. நமது இந்திய நாட்டில் தான் செல்போன், கம்ப்யூட்டர் வாயிலாக பதிவு செய்து எளிதில் வாக்காளராகி, அடையாள அட்டையும் பெற்றுக்கொள்ளும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தான், வங்காளதேசம், இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் ராணுவ ஆட்சி நடந்திருக்கிறது. ஆனால் நமது இந்திய நாட்டில் தான் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் மக்களாட்சி சுமூகமாக நடைபெற்று வருகிறது.
பாராட்டு
எனவே 18 வயது நிரம்பிய அனைவரும் தங்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்து வாக்களிப்பது நமது கடமை என்பதை உணர்ந்து கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்வதோடு, தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு நிகழ்ச்சியை நிகழ்த்தி காட்டிய பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு எனது பாராட்டை தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
குறும்படம்
இந்த நிகழ்ச்சியில் குமரி மெட்ரிக் உயர்நிலைப்பள்ளி, புனித ஜோசப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, நாகர்கோவில் அரசு என்ஜினீயரிங் கல்லூரி, நாகர்கோவில் பெண்கள் கிறிஸ்தவக் கல்லூரி, புனித சிலுவை மகளிர் கிறிஸ்தவ கல்லூரி, பொன்ஜெஸ்லி என்ஜினீயரிங் கல்லூரி, மார்த்தாண்டம் நேசமணி நினைவு கல்லூரி, சுங்கான்கடை ஸ்ரீ அய்யப்பா மகளிர் கல்லூரி மாணவ-மாணவிகள், இல்லம் தேடி கல்வித்திட்ட மாணவ, மாணவிகள் ஆகியோரின் தேர்தல் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தயாரிக்கப்பட்ட வாக்காளர் விழிப்புணர்வு குறித்த 3 நிமிட குறும்படத்தையும் தலைமை தேர்தல் அலுவலர் மற்றும் அரசு முதன்மை செயலர் சத்யபிரதா சாகு பார்வையிட்டார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி சிவப்பிரியா, பத்மநாபபுரம் உதவி கலெக்டர் அலர்மேல்மங்கை, நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் சேதுராமலிங்கம், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வீராசாமி, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி புகழேந்தி, தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) திருப்பதி, தாசில்தார்கள் சேகர் (அகஸ்தீஸ்வரம்), சுசீலா (தேர்தல்) உள்ளிட்ட அதிகாரிகள், பள்ளி-கல்லூரி மாணவ, மாணவிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story