20 மாற்று வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைப்பு
ராமநாதபுரம் மாவட்டத்தில் பழுதான 20 வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு பதிலாக பரிசோதிக்கப்பட்டு நல்ல நிலையில் உள்ள 20 மாற்று எந்திரங்கள் நேற்று அனுப்பி வைக்கப்பட்டன.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டத்தில் பழுதான 20 வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு பதிலாக பரிசோதிக்கப்பட்டு நல்ல நிலையில் உள்ள 20 மாற்று எந்திரங்கள் நேற்று அனுப்பி வைக்கப்பட்டன.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமநாதபுரம், பரமக்குடி, ராமேசுவரம், கீழக்கரை ஆகிய 4 நகராட்சிகள் மற்றும் மண்டபம், ஆர்.எஸ்.மங்கலம், தொண்டி, சாயல்குடி, கமுதி, முதுகுளத்தூர், அபிராமம் ஆகிய 7 பேரூராட்சிகளுக்கு நாளை(சனிக்கிழமை) நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் 111 நகராட்சி கவுன்சிலர் மற்றும் 108 பேரூராட்சி கவுன்சிலர் உள்பட 219 நகர்ப்புற உள்ளாட்சி பதவிகள் உள்ளன. இதில் ராமநாதபுரம் நகராட்சியில் 2 கவுன்சிலர்கள், கமுதி பேரூராட்சியில் 11 கவுன்சிலர்கள், அபிராமம் பேரூராட்சியில் 1 கவுன்சிலர் ஏற்கனவே போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு விட்டனர். மீதி உள்ள 205 உள்ளாட்சி பதவிகளுக்கு இந்த தேர்தல் நடத்தப்படுகிறது. அதன்படி 109 நகராட்சி கவுன்சிலர் பதவிகளுக்கு 527 வேட்பாளர்கள், 96 பேரூராட்சி கவுன்சிலர் பதவிகளுக்கு 393 வேட்பாளர்கள் என மொத்தம் 920 வேட்பாளர்கள் களத்தில் போட்டியிடுகின்றனர். மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மூலம் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்காக மாவட்டம் முழுவதும் 327 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.
கண்காணிப்பு கேமரா
அதன்படி நகராட்சிகளில் ராமநாதபுரத்தில் 60, பரமக்குடியில் 83, ராமேசுவரத்தில் 42, கீழக்கரையில் 43 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. பேரூராட்சிகளில் அபிராமத்தில் 14, கமுதியில் 4, மண்டபத்தில் 18, முதுகுளத்தூரில் 15, ஆர்.எஸ்.மங்கலத்தில் 15, சாயல்குடியில் 15, தொண்டியில் 18 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.
அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சி.சி.டி.வி. கேமரா கண்காணிப்பு வசதி, பதற்றமான மற்றும் மிக பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. தேர்தல் பணிகளில் சுமார் 2 ஆயிரத்து 708 அரசு அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இந்த வாக்குப்பதிவின்போது மாவட்டத்தில் உள்ள 327 வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
20 மாற்று எந்திரங்கள் அனுப்பி வைப்பு
இந்நிலையில் இந்த வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்ப்பின்போது 20 எந்திரங்களில் குறை காணப்பட்டதால் அதற்கு மாற்றாக வேறு எந்திரங்கள் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி நேற்று காலை கலெக்டர் அலுவலகத்தில் இதற்கான எந்திரங்கள் சரிபார்க்கும் பணி மாவட்ட தேர்தல் பார்வையாளர் அஜய் யாதவ், கலெக்டர் சங்கர்லால் குமாவத் ஆகியோர் தலைமையில் நடந்தது. பெல் நிறுவனத்தில் இருந்து வந்திருந்த பொறியாளர்கள் மூலம் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்க்கப்பட்டன. அனைவரின் ஒப்புதலுடன் மேற்கண்ட 20 எந்திரங்கள் அந்தந்த தேர்தல் அலுவலர்கள் மூலம் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டன.
Related Tags :
Next Story