நிலாவுக்கு ெபாங்கல் வைத்து மலைவாழ் மக்கள் வினோத படையல்


நிலாவுக்கு ெபாங்கல் வைத்து மலைவாழ் மக்கள் வினோத படையல்
x
தினத்தந்தி 18 Feb 2022 12:42 AM IST (Updated: 18 Feb 2022 12:42 AM IST)
t-max-icont-min-icon

ஏலகிரி மலையில் பாரம்பரியம் மாறாத நிலாவூரில் மலைவாழ் மக்கள் நிலாவுக்கு பொங்கல் வைத்து படையலிட்டு கும்மி அடித்து நிலா பொங்கல் கொண்டாடியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஜோலார்பேட்டை

ஏலகிரி மலையில் பாரம்பரியம் மாறாத நிலாவூரில் மலைவாழ் மக்கள் நிலாவுக்கு பொங்கல் வைத்து படையலிட்டு கும்மி அடித்து நிலா பொங்கல் கொண்டாடியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
14 சிறிய கிராமங்கள்

ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏலகிரி மலை தமிழகத்தின் சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகவும் விளங்கி வருகிறது. இந்த மலைக்கு செல்லும் 14 கொண்டைஊசி வளைவுகளும் தமிழக புலவர்கள் பெயர்கள் சூட்டப்பட்டு பெருமை சேர்க்கப்பட்டுள்ளது.

14 சிறிய கிராமங்களை உள்ளடக்கிய ஏலகிரி மலை தனி ஊராட்சியாக செயல்பட்டு வருகிறது. இங்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் முக்கியத் தொழிலாக விவசாயம் இருந்து வருகிறது. 

இங்குள்ள மலைவாழ்மக்கள் ஆதிகாலம் முதல் பாரம்பரியம் மாறாமல் பல்வேறு கலை, கலாசார நிகழ்ச்சிகளை கடைபிடித்து வருகின்றனர். மலைவாழ் மக்களின் பாரம்பரியம் மாறாத பல்வேறு நிகழ்ச்சிகள், விழாக்கள் போன்றவற்றை காண்பதற்காக சுற்றுலா பயணிகள் விடுமுறையில் வந்து தங்கி செல்கின்றனர். 

விவசாயத்திற்கு சூரியனும், நிலாவும் எவ்வளவு முக்கியமோ அதற்காக தைப்பொங்கலன்று சூரியனுக்கும் மாசி மாத பவுர்ணமியன்று நிலாவிற்கும் சிறப்பு பூஜை செய்து பாரம்பரியம் மாறாமல்  பொங்கல் வைத்து வழிபட்டு வருகின்றனர். 

சாவடியில் ஒன்று கூடினர்

அதன்படி மாசி மாத பவுர்ணமி தினமான நேற்று முன்தினம் நிலாவூர் கிராமத்தில் வசிக்கும் மலைவாழ் மக்கள் இரவு 11 மணி அளவில் ஊரின் மத்தியிலுள்ள சாவடியில் ஒன்று கூடி நிலாவிற்கு பொங்கல் வைத்தனர். 

பின்னர் உரலில் உலக்கை வைத்து அதில் பொறி, பொங்கல், பழ வகைகள் பால் போன்றவற்றை வைத்தனர். அப்போது நிலாவை குளிர்ச்சியூட்டும் வகையில் நிலா பாட்டு பாடி பெண்கள் கும்மி அடித்தனர்.

உருண்டை பிடித்து வழங்கினர்

அவர்கள் பொங்கல் வைத்த உணவை ஒன்றாகக் கொட்டி உருண்டை பிடித்து அனைவருக்கும் வழங்கி உண்டு மகிழ்ந்தனர். 

 இது போன்ற பாரம்பரியம் மாறாத நிகழ்ச்சி ஏலகிரி மலையில் நிலாவூரில் மட்டுமே தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் நடைபெற்று வருகிறது. இதனாலேயே இந்த கிராமத்திற்கு நிலாவூர் என பெயர் சிறப்பு கொண்டதாகவும் தெரிவிக்கின்றனர். 

நிகழ்ச்சியில் ஏலகிரி மலை ஊராட்சி மன்ற தலைவர் ராஜஸ்ரீ கிரி வேலன், துணை தலைவர் திருமால், ஒன்றிய கவுன்சிலர் லட்சுமி செந்தில்குமார் மற்றும் வார்டு உறுப்பினர்கள், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story