கேரளாவுக்கு கடத்த பதுக்கி வைத்திருந்த 1½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்
குளச்சல் அருகே கேரளாவுக்கு கடத்த பதுக்கி வைத்திருந்த 1½டன் ரேஷன் அரிசியை பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
குளச்சல்,
குளச்சல் அருகே கேரளாவுக்கு கடத்த பதுக்கி வைத்திருந்த 1½டன் ரேஷன் அரிசியை பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தீவிர சோதனை
குமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு ரேஷன் பொருட்கள் அதிகளவில் கடத்தப்பட்டு வருகிறது. அவற்றை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மட்டும் வருவாய்த்துறையின் பறக்கும்படை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி பறிமுதல் செய்து வருகிறார்கள்.
அதன்படி குமரி மாவட்ட பறக்கும் படை தாசில்தார் தமிழரசி தலைமையில் குளச்சல் சப்-இன்ஸ்பெக்டர் மோகன் ஜோஸ்லின் மற்றும் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் நேற்று இரவு குளச்சல் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
ரேஷன் அரிசி பறிமுதல்
அவர்கள் குளச்சல் அருகே சைமன் காலனி பகுதியில் சென்றபோது, அங்கு ஒரு வீட்டின் பின்புறம் சந்தேகப்படும் வகையில் பிளாஸ்டிக் சாக்கு மூடைகள் இருப்பதை கண்டனர். அதிகாரிகள் அங்கு சென்று நடத்திய சோதனையில் சிறு சிறு மூடைகளில் 350 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதேபோல், கோடிமுனை பகுதியில் ஒரு வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1 டன் ரேஷன் அரிசியையும் அதிகாரிகள் கண்டு பிடித்து பறிமுதல் செய்தனர்.
இந்த 2 இடங்களிலும் பறிமுதல் செய்யப்பட்ட மொத்தம் 1 டன் 350 கிலோ ரேஷன் அரிசியை உடையார்விளை அரசு நுகர்வோர் வாணிபக்கழக குடோனில் ஒப்படைத்தனர். அதிகாரிகளின் விசாரணையில் ரேஷன் அரிசிகளை கேரளாவுக்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. மேலும், இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story