இறுதிக்கட்ட பிரசாரத்தில் தி.மு.க.-பா.ம.க. ஒரே இடத்தில் திரண்டதால் பரபரப்பு


இறுதிக்கட்ட பிரசாரத்தில் தி.மு.க.-பா.ம.க. ஒரே இடத்தில் திரண்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 18 Feb 2022 12:49 AM IST (Updated: 18 Feb 2022 12:49 AM IST)
t-max-icont-min-icon

செஞ்சியில் இறுதிக்கட்ட பிரசாரத்தில் தி.மு.க. மற்றும் பா.ம.க. ஒரே இடத்தில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

செஞ்சி, 

செஞ்சி பேரூராட்சியில் வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கு தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நேற்று அமைச்சர் செஞ்சி மஸ்தான் தலைமையில் செஞ்சியில் இறுதிக்கட்ட பிரசாரம் நடந்தது. 
அப்போது செட்டிப்பாளையத்தில் இருந்து காந்தி பஜார் வழியாக மாலை 5.20 மணிக்கு தி.மு.க.வினர் பேரணியாக செஞ்சி கூட்டுரோட்டுக்கு வந்தனர். அங்கு வேனில் இருந்தபடி அமைச்சர் செஞ்சி மஸ்தான் பிரசாரம் செய்தார்.
அதே நேரத்தில் பா.ம.க.வினரும் தங்களது இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனர். இதற்காக பா.ம.க. வேட்பாளர்களை ஆதரித்து மாநில துணை செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் கட்சியினர் பேரணியாக செஞ்சி கூட்டு ரோட்டுக்கு வந்தனர். 

பதற்றம்

இரு கட்சிகளும் ஒரே இடத்தில் திரண்டு நின்று பிரசாரத்தில் ஈடுபட்டதால் அங்கு குழப்பமும், பதற்றமும் ஏற்பட்டது. இதையடுத்து மோதல் ஏதும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் செஞ்சி துணை போலீஸ் சூப்பிரண்டு பிரியதர்ஷினி தலைமையிலான போலீசார் அங்கு குவிந்தனர்.
பின்னர் போலீசார், பா.ம.க.வினரை அங்கிருந்து செல்லுமாறு கூறினர். இதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து, தேர்தல் பிரசாரம் முடிய இன்னும் நேரம் உள்ளது என்று கூறி தொடர்ந்து பிரசாரத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருக்கும், பா.ம.க.வினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.அப்போது பா.ம.க.வினர் அங்கு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பா.ம.க.வினரை போலீசார் சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். அதனை தொடர்ந்து தி.மு.க.வினரும் தங்கள் பிரசாரத்தை முடித்துக் கொண்டு அங்கிருந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story