2 ஆண்டுகளுக்கு பிறகு குமரியில் நர்சரி மற்றும் மழலையர் பள்ளிகள் திறப்பு
குமரி மாவட்டத்தில் 2 ஆண்டுகளுக்கு பிறகு நர்சரி மற்றும் மழலையர் பள்ளிகள் திறக்கப்பட்டன. இதனால் குழந்தைகள் புத்தாடை அணிந்து உற்சாகத்துடன் பள்ளிக்கு வந்தனர்.
நாகர்கோவில்,
குமரி மாவட்டத்தில் 2 ஆண்டுகளுக்கு பிறகு நர்சரி மற்றும் மழலையர் பள்ளிகள் திறக்கப்பட்டன. இதனால் குழந்தைகள் புத்தாடை அணிந்து உற்சாகத்துடன் பள்ளிக்கு வந்தனர்.
கொரோனா தொற்று
இந்தியாவில் கொரோனா பரவல் கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் தீவிரமாக பரவியது. இதனால் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி தமிழகம் முழுவதும் மார்ச் மாதம் 17-ந் தேதி முதல் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன.
பின்னர் கொரோனா பரவல் குறைய தொடங்கியது. இதைதொடர்ந்து பல்வேறு கட்ட ஊரடங்குகள் அறிவிக்கப்பட்டு அதில் பல்வேறு தளர்வுகளும் அறிவிக்கப்பட்டன.
அதன்படி கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1-ந் தேதி முதல் கல்லூரிகள் மற்றும் 9, 10-ம் வகுப்பு, பிளஸ்-1, பிளஸ்-2 ஆகிய மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது. நவம்பர் மாதம் 2-ந் தேதி முதல் 1-ம் வகுப்பு முதல் 8 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆனால் மழலையர் பள்ளி மற்றும் நர்சரி (எல்.கே.ஜி. மற்றும் யு.கே.ஜி.) பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது.
மழலையர்- நர்சரி பள்ளிகள் திறப்பு
இந்த நிலையில் கடந்த 12-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட்டு, அதில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதில் நர்சரி மற்றும் மழலையர் பள்ளிகள் 16-ந் தேதி (அதாவது நேற்றுமுன்தினம்) முதல் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி தமிழகம் முழுவதும் நீண்ட நாட்களுக்கு பிறகு நேற்று முன்தினம் நர்சரி மற்றும் மழலையர் பள்ளிகள் திறக்கப்பட்டன.
ஆனால் நேற்று முன்தினம் ஞான மாமேதை பீர்முகம்மது ஒலியுல்லா ஆண்டு திருவிழாவையொட்டி, குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டது. இதனால் குமரி மாவட்டத்தில் மழலையர் மற்றும் நர்சரி பள்ளிகள் திறக்கப்பட வில்லை. இதனை தொடர்ந்து சுமார் 2 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று குமரி மாவட்டத்திலுள்ள 97 நர்சரி பள்ளிகள் மற்றும் மழலையர் பள்ளிகள் திறக்கப்பட்டன. 2 வருடங்களாக வீடுகளில் முடங்கிக் கிடந்த குழந்தைகள் நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டதால் புத்தாடை அணிந்து புத்தகப்பையை எடுத்துக்கொண்டு தங்களது பெற்றோருடன் பள்ளிக்கு மிக ஆர்வமாக வந்தனர்.
கண்கலங்கிய பெற்றோர்
பெற்றோருடன் பள்ளிக்கு வந்த குழந்தைகளை ஆசிரியர்கள் மற்றும் மூத்த மாணவர்கள் இனிப்பு கொடுத்து உற்சாகமாக வரவேற்றனர். அப்போது பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு அன்பு முத்தம் கொடுத்தும் பள்ளி வகுப்பறைக்கு அனுப்பி வைத்ததை காணமுடிந்தது. பல குழந்தைகள் பள்ளியின் வாசலில் இருந்து வகுப்புக்கு செல்ல மறுத்து அழுதனர். அதனைக் கண்டு சில பெற்றோரும் கண்கலங்கியதையும் காணமுடிந்தது. பின்னர் பெற்றோர் குழந்தைகளை பாசத்துடன் அணைத்து சமாதானப்படுத்தி வகுப்பறைக்கு அனுப்பி வைத்தார்கள்.
அப்போது ஆசிரியர்களும் சேர்ந்து குழந்தைகளை சமாதானப்படுத்தினர். பல குழந்தைகள் வகுப்பறையிலும் தங்களின் அழுகையை நிறுத்தாமல் தொடர்ந்து அழுது கொண்டு இருந்ததையும் பார்க்க முடிந்தது. அவர்களை வகுப்பு ஆசிரியர்கள் இனிப்புகளை வழங்கியும், பல வழிகளில் சமாதானம் கூறியும் குழந்தைகளின் அழுகையையும் நிறுத்தினர்.
முன்னதாக மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் அரசு மற்றும் தனியார் நர்சரி பள்ளிகளில் நேற்று முன்தினம் வகுப்புகள் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தண்ணீரால் சுத்தம் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story