அய்யம்பேட்டை பேரூராட்சி தி.மு.க. பெண் வேட்பாளர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
இறுதி கட்ட தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு இருந்தபோது அய்யம்பேட்டை பேரூராட்சி தி.மு.க. பெண் வேட்பாளர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதனால் அந்த வார்டு தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.
அய்யம்பேட்டை:
இறுதி கட்ட தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு இருந்தபோது அய்யம்பேட்டை பேரூராட்சி தி.மு.க. பெண் வேட்பாளர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதனால் அந்த வார்டு தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.
தி.மு.க. பெண் வேட்பாளர்
தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை காந்தி நகரை சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மனைவி அனுசுயா(வயது 63). இவர், அய்யம்பேட்டை பேரூர் தி.மு.க. துணை செயலாளராக இருந்து வந்தார். இந்த நிலையில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அய்யம்பேட்டை பேரூராட்சி 9-வது வார்டில் தி.மு.க. சார்பில் போட்டியிடுவதற்காக இவருக்கு கட்சி வாய்ப்பு வழங்கியது.
இதனையடுத்து அவர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வார்டில் அனுசுயா உள்பட 6 பேர் போட்டியிட்டனர். அனுசுயா வேட்பு மனு தாக்கல் செய்தது முதல் தொடர்ந்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தார்.
மயங்கி விழுந்து உயிரிழப்பு
தேர்தல் பிரசாரத்திற்கு நேற்று இறுதி நாள் என்பதால் நேற்று காலையிலேயே தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுடன் வீடு, வீடாக நடந்து சென்று இறுதி கட்ட தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
காலை 11 மணியளவில் 9-வது வார்டுக்கு உட்பட்ட பெரிய தைக்கால் தெரு பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு இருந்தபோது அனுசுயா திடீரென மயங்கி விழுந்தார். அதைப்பார்த்ததும் வேட்பாளருடன் சென்ற நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், அனுசுயா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.
சோகம்
இதையடுத்து அனுசுயாவின் உடல் அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. இறந்த அனுசுயாவுக்கு ஒரு மகனும், 4 மகள்களும் உள்ளனர். கடந்த சில நாட்களாக தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு இருந்த தி.மு.க. பெண் வேட்பாளர் அனுசுயா இறுதி கட்ட தேர்தல் பிரசாரத்தின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒத்தி வைப்பு
அனுசுயா மரணம் குறித்து அளிக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் அய்யம்பேட்டை பேரூராட்சி 9-வது வார்டு தேர்தல் ஒத்தி வைக்கப்படுவதாக பேரூராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜசேகர் அறிவித்துள்ளார்.
Related Tags :
Next Story