தஞ்சை மாநகராட்சி பகுதியில் பிரசாரம் ஓய்ந்தது
தஞ்சை மாநகராட்சி பகுதியில் தேர்தல் பிரசாரம் நேற்று மாலையுடன் நிறைவடைந்தது. அரசியல் கட்சி வேட்பாளர்கள் தொண்டர்களுடன் இருசக்கர வாகன பேரணியாக வலம் வந்து வாக்கு சேகரித்தனர். தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கி.வீரமணி பிரசாரத்தை நிறைவு செய்தார்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாநகராட்சி பகுதியில் தேர்தல் பிரசாரம் நேற்று மாலையுடன் நிறைவடைந்தது. அரசியல் கட்சி வேட்பாளர்கள் தொண்டர்களுடன் இருசக்கர வாகன பேரணியாக வலம் வந்து வாக்கு சேகரித்தனர். தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கி.வீரமணி பிரசாரத்தை நிறைவு செய்தார்.
தஞ்சை மாநகராட்சி
தஞ்சை மாநகராட்சி தேர்தல் நாளை 19-ந்தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 28-ந்தேதி தொடங்கி 4-ந்தேதியுடன் நிறைவடைந்தது. இறுதி வேட்பாளர் பட்டியல்கடந்த 7-ந்தேதி வெளியிடப்பட்டது. அன்று முதல் வேட்பாளர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
தஞ்சை மாநகராட்சி பகுதியில் 51 வார்டுகளுக்கு 282 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இதில் தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், பா.ஜ.க., தே.மு.தி.க., பா.ம.க., த.மா.கா., இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம், எஸ்.டி.பி.ஐ. கட்சி, உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள், சுயேச்சை வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.
பிரசாரம் நிறைவு
நேற்று மாலை 6 மணியுடன் பிரசாரம் நிறைவடைந்தது. ஒவ்வொரு கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்தும் அந்த கட்சியின் மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். வேட்பாளர்களும் காலை தொடங்கி மாலை வரையில் பிரசாரம் செய்தனர்.
சில வேட்பாளர்கள் மாலையில் இருசக்கர வாகனத்தில் தொண்டர்களுடன் பேரணியாக வலம் வந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். தஞ்சை மாநகரில் போட்டியிடும் 51 வார்டுகளை சேர்ந்த தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தஞ்சை அண்ணாசிலை அருகே பிரசாரத்தை நிறைவு செய்தார்.
கி.வீரமணி பேச்சு
அப்போது கி.வீரமணி பேசுகையில், தஞ்சை மாநகராட்சியில் தி.மு.க. வேட்பாளர்களில் பெண்கள் அதிக அளவில் போட்டியிடுகிறார்கள். இது தான் சமூக நீதி. தி.மு.க. கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றியை அளிக்க வாக்காளர்களும் ஆயத்தமாக உள்ளனர். தி.மு.க.வுக்கு, தி.க. தான் தாய் கழகம்.
சொல்லாததையும் செய்வது தான் திராவிடம். தி.மு.க. கூட்டணியினர் செய்த சாதனைகளை கூறி வாக்கு சேகரித்து வருகிறார்கள். இந்த ஆட்சி 27 அமாவாசை தான் என்று எடப்பாடி பழனிசாமி சொல்கிறார். இன்னும் 2 ஆண்டுகள் தான் என்று ஓ.பன்னீர்செல்வம் சொல்கிறார். அவர்கள் நினைப்பது ஒரு போதும் நடக்காது.
மக்கள் மன்றம்
பா.ஜ.க. பணத்தை வைத்து கொண்டு வாக்காளர்களை விலைக்கு வாங்க முயற்சி செய்கிறார்கள். அது நடக்காது. சமூக நீதியை முன்னெடுத்து செல்வது தான் தி.மு.க., திராவிட இயக்கம் நம்புவது மக்கள் மன்றத்தை தான் என்றார்.
இதில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள், வேட்பாளர்கள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story