வீட்டுமனை பட்டா கேட்டு நம்பியூர் தாசில்தார் அலுவலகம் முற்றுகை
வீட்டுமனை பட்டா கேட்டு தாசில்தார் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டார்கள்.
நம்பியூர்
வீட்டுமனை பட்டா கேட்டு தாசில்தார் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டார்கள்.
முற்றுகை
ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள எம்மாம்பூண்டி ஊராட்சியில் குப்பிபாளையம், பாப்பான்குட்டை, பருத்திகாட்டு பாளையம் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன.
இங்குள்ள மக்கள் வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி பல முறை அரசு அதிகாரிகளிடம் மனு கொடுத்துள்ளார்கள். ஆனால் இதுவரை வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்தநிலையில் குப்பிபாளையம், பாப்பான்குட்டை, பருத்திகாட்டு பாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று காலை நம்பியூர் தாசில்தார் அலுவலகத்துக்கு சென்று முற்றுகையிட்டார்கள்.
நீண்ட காலமாக...
இதுகுறித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பொதுமக்கள் கூறும்போது, நாங்கள் நீண்ட காலமாக குடியிருந்து வருகிறோம். அந்த இடத்துக்கு பட்டா வழங்கக்கோரி பல முறை மனு கொடுத்துவிட்டோம். ஆனால் எங்களுக்கு வழங்கப்படவில்லை. வெளியூரில் இருந்து புதிதாக வந்த சிலருக்கு வீட்டுமனை பட்டா கொடுத்துள்ளார்கள். மேலும் வருகிற திங்கட்கிழமை ஈரோடு கலெக்டர் அலுவலகத்துக்கு சுமார் 500 பேர் சென்று மனு கொடுக்க உள்ளோம் என்றார்கள்.
கலெக்டருக்கு பரிந்துரை
அதன்பின்னர் முற்றுகை போராட்டம் நடத்தியவர்களிடம் நம்பியூர் தாசில்தார் கிருஷ்ணன் சென்று, வீட்டுமனை பட்டா வழங்க கலெக்டருக்கு பரிந்துரை செய்துள்ளோம். மேலும் வீடு இல்லாதவர்களிடமும் மனுக்கள் பெற்று வருகிறோம். எனவே தகுதியான அனைவருக்கும் வீட்டுமனை பட்டா வழங்கப்படும் என்றார். அதை ஏற்றுக்கொண்டு சுமார் 1 மணி நேரத்துக்கு பிறகு பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றார்கள்.
Related Tags :
Next Story