வாக்குச்சாவடி மையங்களுக்கு 26 வகையான பொருட்கள் இன்று அனுப்பப்படுகிறது
வாக்குச்சாவடி மையங்களுக்கு தேவையான 26 வகையான பொருட்கள் இன்று (வெள்ளிக்கிழமை) அனுப்பப்படுகிறது.
ஈரோடு
வாக்குச்சாவடி மையங்களுக்கு தேவையான 26 வகையான பொருட்கள் இன்று (வெள்ளிக்கிழமை) அனுப்பப்படுகிறது.
கொரோனா தடுப்பு உபகரணங்கள்
ஈரோடு மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி மின்னணு வாக்குப்பதிவு எந்திரம், கட்டுப்பாட்டு எந்திரம் ஆகியவை அந்தந்த தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கட்டுப்பாட்டில் உள்ளன. இவைகள் இன்று (வெள்ளிக்கிழமை) மதியம் சம்மந்தப்பட்ட வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
அவற்றுடன் சுகாதாரத்துறை மூலம் கொரோனா தடுப்பு உபகரணங்களான முக கவசம், சானிடைசர், வாக்குச்சாவடி வளாகத்தில் தெளிக்க கிருமி நாசினி, முகத்தில் அணியும் ஹெல்மெட் வடிவிலான முககவசம் போன்றவை தனியாக அட்டை பெட்டிகளில் போட்டு தயார் நிலையில் வைத்துள்ளனர்.
26 வகையான பொருட்கள்
மேலும் ஈரோடு மாநகராட்சி, அந்தந்த நகராட்சிகள், பேரூராட்சி அலுவலகங்களில் இருந்து அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பயன்படுத்தப்படும் பேப்பர், பேனா, பென்சில், ரப்பர், பசை, கயிறு, சீல் வைப்பதற்கான காரக், மெழுகுவர்த்தி, தீப்பெட்டி, சிறிய ரப்பர்பேண்ட், வாக்குச்சாவடிக்கான வாக்காளர் பட்டியல், மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் வைக்கும் இடத்தை மறைப்பதற்கான அட்டையால் ஆன தடுப்பு என, 26 வகையான பொருட்கள் ஒரு சாக்குப்பையில் போட்டு தயார் செய்யும் பணி நேற்று நடந்தது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள, 1,221 வாக்குச்சாவடிகளுக்கும் தனித்தனியாக இதேபோன்ற உபகரணங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. இவைகள் இன்று மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுடன், வேன்கள் அல்லது லாரிகளில் ஏற்றப்பட்டு வாக்குச்சாவடி மையங்களுக்கு போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட உள்ளது.
Related Tags :
Next Story