வாக்குறுதிகளை அள்ளி வீசி தேர்தல் பிரசாரத்தை முடித்த வேட்பாளர்கள்- நாளை காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு
வேட்பாளர்கள் அள்ளி வீசிய வாக்குறுதிகளுடன் தேர்தல் பிரசாரம் நேற்று முடிந்தது. நாளை (சனிக்கிழமை) காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடக்கிறது.
ஈரோடு
வேட்பாளர்கள் அள்ளி வீசிய வாக்குறுதிகளுடன் தேர்தல் பிரசாரம் நேற்று முடிந்தது. நாளை (சனிக்கிழமை) காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடக்கிறது.
769 வார்டுகள்
ஊரக உள்ளாட்சி தேர்தல் நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. கடந்த ஜனவரி 28-ந் தேதி வேட்புமனு தொடங்கியது. கடந்த 7-ந் தேதி இறுதி பட்டியல் வெளியிடப்பட்டது. அதைத்தொடர்ந்து தீவிர பிரசாரம் நடந்து வந்தது. 21 வார்டுகளில் போட்டியின்றி கவுன்சிலர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
எனவே ஈரோடு மாவட்டத்தில் 771 வார்டுகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில் வேட்பாளர்கள் மரணம் காரணமாக மேலும் 2 வார்டுகளுக்கு வாக்குப்பதிவு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. எனவே 769 வார்டுகளுக்கு நாளை (சனிக்கிழமை) தேர்தல் நடத்தப்படுகிறது.
மாநகராட்சி
ஈரோடு மாநகராட்சியில் 51-வது வார்டினை தி.மு.க. போட்டியின்றி கைப்பற்றி விட்டதால், மொத்தம் 59 வார்டுகளுக்கு மட்டும் தேர்தல் நடக்கிறது. இந்த 59 பதவிகளை கைப்பற்ற 352 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். கடந்த ஒரு வாரமாக ஈரோட்டில் வேட்பாளர்கள் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்து வருகிறார்கள்.
தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், பா.ஜனதா, தே.மு.தி.க., கம்யூனிஸ்டு கட்சிகள், பாட்டாளி மக்கள் கட்சியினர், நாம் தமிழர், அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம், ம.தி.மு.க., எஸ்.டி.பி.ஐ., மக்கள் நீதி மய்யம் கட்சிகள் மட்டுமின்றி சுயேச்சை வேட்பாளர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
தலைவர்கள்
தி.மு.க. சார்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் 108 இடங்களில் பிரசாரம் மேற்கொண்டார். தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ., அமைச்சர் சு.முத்துசாமி, திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ. உள்பட தி.மு.க.வின் முக்கிய தலைவர்கள் நிர்வாகிகள் ஈரோட்டில் பிரசாரம் மேற்கொண்டனர்.
அ.தி.மு.க. சார்பில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் ஈரோட்டை சேர்ந்த முன்னணி நிர்வாகிகள் பிரசாரம் செய்தனர். பா.ஜனதா சார்பில் மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் முக்கிய நிர்வாகிகள் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
உறுதிமொழி பத்திரம்
தேர்தல் நாளை (சனிக்கிழமை) நடைபெறுவதால் நேற்று மாலையுடன் பிரசாரம் ஓய்ந்தது. இறுதி நாள் பிரசாரத்தையொட்டி நேற்று இறுதி கட்ட பிரசாரத்தில் வேட்பாளர்கள் தீவிரம் காட்டினார்கள். தொடக்கத்தில் சற்று தொய்வாக இருந்த வேட்பாளர்கள் கூட நேற்று இறுதி கட்டத்தில் தங்கள் பிரசார யுக்தியை பலரும் கவரும் வகையில் மேற்கொண்டனர். தே.மு.தி.க. சார்பில் போட்டியிடும் பெண் வேட்பாளர் ஒருவர் அவரது வார்டில் உள்ள டாஸ்மாக் கடையை 100 நாட்களில் அகற்றுவேன் என்று 20 ரூபாய் பத்திரத்தில் உறுதிமொழி எழுதிக்கொடுத்து, அந்த உறுதிமொழி பத்திரத்தை வீடு வீடாக கொடுத்து பிரசாரம் செய்தார். அவர் வெற்றி பெற்று 100 நாட்களில் டாஸ்மாக் கடையை அகற்றாவிட்டால் பதவியை ராஜினாமா செய்வேன் என்றும் அறிவித்தார்.
சுயேச்சை வேட்பாளர் ஒருவர் செண்டை மேளங்கள் முழங்க வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார். எல்லா வீதிகளிலும் கட்சி சின்னங்களுக்கு வாக்கு சேகரித்து ஒலிபரப்பு வாகனங்கள் சுற்றிக்கொண்டு இருந்தன.
ஓய்ந்தது
வழக்கமாக காலை மற்றும் மாலை நேரங்களில் ஆதரவாளர்களுடன் வீடு வீடாக சென்று வாக்குகள் கேட்டு வந்த வேட்பாளர்கள் நேற்று மதிய வெயிலையும் பொருட்படுத்தாமல் ஓட்டுகள் கேட்டு பிரசாரம் மேற்கொண்டனர். அரசியல் கட்சி வேட்பாளர்கள் தங்கள் கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளின் கொடிகளுடன் மோட்டார் சைக்கிள்களில் ஊர்வலமாக சென்றும், நடந்து சென்றும் வாக்கு கேட்டனர். சுயேச்சைகள் சிலரும் இதுபோன்று ஆதரவாளர்களுடன் சென்றனர். ஆனால், ஓரிரு நண்பர்களுடன் சென்று வாக்கு கேட்டவர்களும் இருந்தனர்.
நேற்று மாலை குறிப்பிட்ட நேரத்தில் அவரவர் முடிவு செய்து இருந்த பகுதிகளில் தேர்தல் பிரசாரத்தை முடித்தனர். இன்று (வெள்ளிக்கிழமை) பிரசாரத்துக்கு ஓய்வாகும். நாளை (சனிக்கிழமை) காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடக்கிறது.
Related Tags :
Next Story