933 வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு- அனைத்து ஏற்பாடுகளும் தயார்


933 வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு- அனைத்து ஏற்பாடுகளும் தயார்
x
தினத்தந்தி 18 Feb 2022 2:22 AM IST (Updated: 18 Feb 2022 2:22 AM IST)
t-max-icont-min-icon

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நெல்லை மாவட்டத்தில் 933 வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது.

நெல்லை:
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நாளை நெல்லை மாவட்டத்தில் 933 வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது.

நாளை வாக்குப்பதிவு
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. நெல்லை மாவட்டத்தில் நெல்லை மாநகராட்சி, அம்பை, விக்கிரமசிங்கபுரம், களக்காடு ஆகிய 3 நகராட்சிகள், 17 பேரூராட்சிகளில் வாக்குப்பதிவு  நடைபெறுகிறது. மாவட்டத்தில் 933 வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு நடக்கிறது.
நெல்லை மாநகராட்சியில் 55 வார்டுகளுக்கு 408 பேரும், அம்பை நகராட்சியில் 21 வார்டுகளுக்கு 69 பேரும், விக்கிரமசிங்கபுரம் நகராட்சியில் 21 வார்டுகளுக்கு 84 பேரும், களக்காடு நகராட்சியில் 27 வார்டுகளுக்கு 129 பேரும், 17 பேரூராட்சிகளில் 264 வார்டுகளுக்கு 1,100 பேர் என மொத்தம் 388 பதவிகளுக்கு 1,790 பேர் தேர்தல் களத்தில் உள்ளனர்.

பிரசாரம் ஓய்ந்தது
இந்த வேட்பாளர்கள் வீடு, வீடாகச்சென்று பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்து வந்தனர். சில வேட்பாளர்கள் நூதன முறையிலும் பிரசாரம் மேற்கொண்டனர். பரபரப்பாக நடந்து வந்த பிரசாரம் நேற்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. 
இறுதிக்கட்ட பிரசாரத்தில் வேட்பாளர்களும், தலைவர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இந்த தேர்தலில் அனைத்து வாக்குப்பதிவு மையங்களிலும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளதால், அனைத்து வாக்குப்பதிவு மையங்களுக்கும் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைக்க தயார் நிலையில் உள்ளது.

கிருமிநாசினி தெளிப்பு
இன்று (வெள்ளிக்கிழமை) காலையில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அந்தந்த வாக்குப்பதிவு மையங்களுக்கு போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்படுகிறது. இதையொட்டி நேற்று மாலை வாக்குச்சாவடிகளில் கிருமிநாசினி தெளித்து தயார் செய்யப்பட்டது.
வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், தளவாட பொருட்களை கொண்டு செல்வதற்காக தார்ப்பாய் போர்த்திய லாரிகள் நேற்று பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்திற்கு கொண்டு வரப்பட்டன. அந்த வாகனங்களில் `போலீஸ்', `தேர்தல் அவசரம்' என்ற வாசக ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன. இன்று ஒவ்வொரு லாரியிலும் மண்டல அலுவலர் தலைமையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் தளவாட பொருட்கள் எடுத்துச் செல்லப்படுகிறது.
அதே நேரத்தில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு எந்த வாக்குச்சாவடிக்கு செல்ல வேண்டும் என்ற ஆணை வழங்கப்பட்டு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். இன்று பிற்பகல் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு செல்கிறார்கள். அங்கு ஓட்டுப்பதிவுக்கான முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்வார்கள்.

சிறப்பு ஏற்பாடு
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவின்போது, கொரோனா தொற்று உள்ளவர்கள் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
தொற்று உள்ளவர்கள் ஓட்டு போட வந்தால், அவர்கள் பயன்படுத்துவதற்காக கவச உடை உள்ளிட்டவை அடங்கிய ‘‘கொரோனா கிட்’’ தயார்படுத்தப்பட்டது. அவை நெல்லை டவுன் மாநகராட்சி மண்டல அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டு தேர்தல் வாக்குப்பதிவு எந்திரம் எடுத்துச்செல்லும்போது வாக்குச்சாவடிக்கு கொண்டு செல்லப்படுகிறது.
எனவே நெல்லை மாவட்டத்தில் நாளை நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது.

Next Story