மயங்கிய நிலையில் பெண் மீட்கப்பட்ட வழக்கில் கள்ளக்காதலன் கைது


மயங்கிய நிலையில் பெண் மீட்கப்பட்ட வழக்கில் கள்ளக்காதலன் கைது
x
தினத்தந்தி 18 Feb 2022 2:34 AM IST (Updated: 18 Feb 2022 2:34 AM IST)
t-max-icont-min-icon

குற்றாலத்தில் கை, கால்கள் கட்டப்பட்டு மயங்கிய நிலையில் பெண் மீட்கப்பட்ட வழக்கில் கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டார்.

தென்காசி:
குற்றாலத்தில் கை, கால்கள் கட்டப்பட்டு மயங்கிய நிலையில் பெண் மீட்கப்பட்ட வழக்கில் கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டார்.
 
மயங்கிய நிலையில் கிடந்த பெண்
தென்காசி மாவட்டம் குற்றாலம் சுற்றுலா மாளிகைக்கு பின்புறம் மரங்கள் அடர்ந்து வளர்ந்து காணப்படுகிறது. சம்பவத்தன்று அந்த பகுதியில் கை, கால்கள் கட்டப்பட்டு வாயில் துணியை வைத்து அடைத்த நிலையில் பெண் ஒருவர் மயங்கி கிடந்தார்.
இதுகுறித்து சுற்றுலா மாளிகை காவலாளி குற்றாலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனே போலீசார் அங்கு வந்து, அந்த பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். 

அடையாளம் தெரிந்தது
இதையடுத்து அந்த பெண் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அச்சன்புதூர் போலீஸ் நிலையத்தில், ஒரு பெண் மாயமானதாக புகார் கொடுக்கப்பட்டு வழக்கு பதிவாகி இருந்தது. 
அதன் அடிப்படையில் விசாரித்தபோது, மயங்கிய நிலையில் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர் அச்சன்புதூர் போலீஸ் சரகம் நெடுவயல் கிராமத்தை சேர்ந்த ஆறுமுகச்சாமி மனைவி செல்லப்பொண்ணு (வயது 45) என்பது தெரியவந்தது.

போலீசார் விசாரணை
இதையடுத்து அவர் செல்போனில் இருந்து யாரிடம் எல்லாம் பேசினார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில், காஞ்சீபுரம் காமாட்சி காலனி முதல் தெருவைச் சேர்ந்த ராஜவேல் மகன் சந்தோஷ்குமார் என்ற அழகுராஜ் (37) என்பவருடன் அடிக்கடி பேசியது தெரியவந்தது. 
இதைத்தொடர்ந்து போலீசார் காஞ்சீபுரம் சென்று சந்தோஷ் குமாரை குற்றாலம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அதில், சந்தோஷ்குமார் தான் கீழே தள்ளி விட்டதில் செல்லப்பொண்ணு காயம் அடைந்ததாக கூறினார்.
இதுதொடர்பாக சந்தோஷ்குமார் போலீசாரிடம் அளித்துள்ள பரபரப்பு வாக்குமூலம் கொடுத்து உள்ளார். அதில் அவர் கூறியதாவது:-

மிஸ்டுகால் மூலம் பழக்கம்
எனக்கு சொந்த ஊர் காஞ்சீபுரம். நான் பட்டுத்தறி நெசவு கூடத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறேன். எனக்கு திருமணம் ஆகவில்லை. 4 ஆண்டுகளுக்கு முன்பு எனது செல்போனுக்கு ஒரு மிஸ்டு கால் வந்தது. அந்த எண்ணில் தொடர்பு கொண்டு பேசியபோது செல்லப்பொண்ணு பேசினார். தொடர்ந்து நாங்கள் போனில் பேசி பழகி வந்தோம். 
இந்த நிலையில் கடந்த 12-ந்தேதி செல்லப்பொண்ணு என்னை தென்காசிக்கு வரும்படி கூறினார். நானும் வந்தேன். பின்னர் நாங்கள் குற்றாலம் வந்தோம். குற்றாலத்தில் சுற்றுலா மாளிகைக்கு பின்புறம் என்னை அவர் அழைத்து சென்றார். அங்கு நாங்கள் இருவரும் உல்லாசமாக இருந்தோம். பின்னர் அவர் என்னை ஊருக்கு செல்ல வேண்டாம் என்றும், இங்கேயே இருக்குமாறும் கூறினார். இதுதொடர்பாக எங்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டது. 
தங்க நகை 
அப்போது நான் அவரை கீழே தள்ளி விட்டேன். இதில் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. நான் அங்கிருந்து செல்ல முயன்றேன். அப்போது அவர் சத்தம் போட்டதால், அவரது வாயில் துணியை வைத்து அடைத்து, கை, கால்களை கட்டிப்போட்டு விட்டு அவரது கழுத்தில் கிடந்த தங்க நகையை எடுத்துக்கொண்டு சென்று விட்டேன். 
இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
 
கள்ளக்காதலன் கைது
இதையடுத்து குற்றாலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் ஜோஸ் வழக்குப்பதிவு செய்து, சந்தோஷ் குமாரை கைது செய்தார். பின்னர் சந்தோஷ்குமார் தென்காசி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 
ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் செல்லப்பொண்ணு பேச முடியாததால் இதுவரை வாக்குமூலம் எதுவும் கொடுக்கவில்லை. அவர் வாக்குமூலம் கொடுத்தால் தான் சந்தோஷ்குமார் கூறுவது உண்மையா? இதில் வேறு எதுவும் பிரச்சினை உள்ளதா? என்பது குறித்து தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

Related Tags :
Next Story