தேர்தல் பாதுகாப்பு பணியில் 3,500 போலீசார்


தேர்தல் பாதுகாப்பு பணியில் 3,500 போலீசார்
x
தினத்தந்தி 18 Feb 2022 2:34 AM IST (Updated: 18 Feb 2022 2:34 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணியில் 3,500 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் கூறினார்.

நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணியில் 3,500 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் கூறினார்.
வாகனங்கள் ஆய்வு
குமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் மாநகராட்சி, கொல்லங்கோடு, பத்மநாபபுரம், குளச்சல், குழித்துறை ஆகிய 4 நகராட்சிகள் மற்றும் 51 பேரூராட்சிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நாளை (சனிக்கிழமை) நடக்கிறது.
இதனால் தோ்தல் முன்னேற்பாடு பணிகளில் தேர்தல் அதிகாரிகளும், போலீசாரும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அந்தந்த மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. அவற்றை தேர்தல் நடைபெறும் வாக்குச்சாவடிகளுக்கு எடுத்துச்செல்லும் பணிகள் நடைபெற உள்ளது.
இதற்காக எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையங்களுக்கு, நாகர்கோவில் மறவன்குடியிருப்பு ஆயுதப்படை மைதானத்தில் இருந்து நேற்று ஏராளமான வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. முன்னதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் மேற்பார்வையில் போலீசார் வாகனங்கள் அனைத்தையும் ஆய்வு செய்தனர்.
போலீஸ் சூப்பிரண்டு அறிவுரை
அப்போது, மையத்தில் இருந்து வாக்கு எந்திரங்கள் எடுத்துச்செல்லும் வாகனங்களுக்கு பொறுப்பு அதிகாரியாக இருக்கும் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு சூப்பிரண்டு பத்ரி நாராயணன் சில அறிவுரைகள் வழங்கினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
வாக்கு எந்திரங்கள் எடுத்துச் செல்லும் முக்கிய பொறுப்பு உங்களுக்கு தான். உங்களுடன் துப்பாக்கி ஏந்திய ஆயுதப்படை போலீசார், ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள், ஊர்க்காவல் படையினர் உடனிருப்பார்கள். வாகனங்களில் வாக்கு எந்திரங்கள் எடுத்து செல்லும்போது, இடையில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை என்றால் உடனே கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். வாக்குச்சாவடிக்கு சென்றவுடன் மீண்டும் தகவல் தெரிவிக்கவேண்டும்.
தேவையின்றி வாக்குச்சாவடிகளில் யாரும் செல்லக்கூடாது. வாக்கு எந்திரங்கள் மாற்று வண்டிகளில் எடுத்து செல்லும் சூழ்நிலை உருவாக கூடாது. தேர்தல் பணியில் ஈடுபடும் போது கவனமுடனும், விழிப்புடனும் இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின்போது துணை போலீஸ் சூப்பிரண்டுகள் வேல்முருகன், ஈஸ்வரன் மற்றும் ஆயுதப்படை போலீஸ் துணை சூப்பிரண்டு சாம் வேதமாணிக்கம், இன்ஸ்பெக்டர்கள் ஜோஸ், சாந்தகுமாரி உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
பாதுகாப்பு பணியில் 3,500 போலீசார்
அதைத்தொடர்ந்து பத்ரி நாராயண் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தேர்தல் பாதுகாப்பு பணிக்காக மாவட்டம் முழுவதும் 3,500 போலீசார் ஈடுபடுத்தப்படுகிறார்கள். அவர்களில் 2,143 போ் குமரி மாவட்ட போலீசார் ஆவார்கள். குமரி மாவட்டத்தில் அதிக பேரூராட்சி உள்ளதால், மதுரை மற்றும் தூத்துக்குடியில் இருந்து ஏராளமான போலீசார் வந்துள்ளனா். மேலும் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் 500 பேரும், 350 ஊரகக்காவல் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். இதுதவிர 125 பேர் கொண்ட பறக்கும் படைக்குழுக்களும் தயார் நிலையில் உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story