சின்ன வெங்காயம் விலை வீழ்ச்சி


சின்ன வெங்காயம் விலை வீழ்ச்சி
x
தினத்தந்தி 18 Feb 2022 5:43 PM IST (Updated: 18 Feb 2022 5:43 PM IST)
t-max-icont-min-icon

சின்ன வெங்காயம் விலை வீழ்ச்சி

பல்லடம், 
சின்ன வெங்காயம் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
சின்ன வெங்காயம்
பெயர் தான் சின்ன வெங்காயம். ஆனால் மவுசு அதிகம். சாம்பாரில் சின்ன வெங்காயம் சேர்க்கப்படவில்லை என்றால் சுவையற்றதாக மாறிவிடும். அதனால்தான் எப்போதும் சமையல் அறையில் நீக்கமற நிறைந்து இருப்பது சின்ன வெங்காயம். சின்ன வெங்காயத்தின் விலை உயர்ந்தால் ஒரு பக்கம் கொண்டாட்டம்.  மறு பக்கம் திண்டாட்டம். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.100க்கு விற்பனை செய்யப்பட்டது. அதன் பின்னர் படிப்படியாக குறைந்து தற்போது கிலோ ரூ.35 க்கு கொள்முதல் செய்யப்படுகிறது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் சின்ன வெங்காயம் பயிரிடப்படுகிறது. இங்கு சாகுபடி செய்யப்படும் சின்ன வெங்காயம் தமிழகத்தின் பிற மாவட்டங்கள், பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. சின்ன வெங்காய சாகுபடி ஆண்டு முழுவதும் தொடர்ந்து நடைபெறுகிறது.
கார்த்திகை மாத பட்டம்
இந்த நிலையில் கடந்த கார்த்திகை மாதம் ஏராளமான விவசாயிகள் சின்ன வெங்காயம் சாகுபடி செய்திருந்தனர். இதைத் தொடர்ந்து வெங்காய அறுவடை இந்த மாத இறுதியில் தொடங்க உள்ளது. தற்போது வரை ஏற்கனவே இருப்பு வைக்கப்பட்ட சின்ன வெங்காயம் சந்தைக்கு வந்து கொண்டிருந்த நிலையில், தற்போது புதிய வெங்காயம் சந்தைக்கு வரத் துவங்கியுள்ளது. மேலும் வெளி மாவட்டங்கள் மற்றும் கர்நாடகாவில் வெங்காய அறுவடை தொடங்கியுள்ளது. வெங்காய அறுவடை பருவம் தொடங்கி உள்ளதால் சின்ன வெங்காயத்தின் விலை உயரும் என்று விவசாயிகள் எதிர்பார்த்தனர். ஆனால், விலை உயரவில்லை. 1 கிலோ சின்ன வெங்காயத்தை அதிக பட்சமாக ரூ.30 வரையே வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர்.
இன்னும் 2 வாரங்களில் உள்ளூரில் வெங்காய அறுவடை தொடங்க உள்ள நிலையில், அதற்கு முன்பே விலை சரிந்துள்ளது விவசாயிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
சாகுபடி செலவு
இது குறித்து சுப்பிரமணியம் என்ற விவசாயி கூறியதாவது
ஒரு ஏக்கர் வெங்காயம் பயிரிட விதை வெங்காயம், உரம், பூச்சி மருந்து, நடவு கூலி, அறுவடைக் கூலி என ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் முதல் 1 லட்சத்து 50 ஆயிரம் வரை செலவாகிறது. நல்ல விளைச்சல் இருந்தால் ஏக்கருக்கு 6 டன் வெங்காயம் கிடைக்கும். ஆனால் 4 முதல் 5 டன் வரையே வெங்காயம் விளைச்சல் கிடைக்கிறது.
கார்த்திகை மாதத்தில் பயிரிடப்பட்ட வெங்காயம், அடுத்த வாரங்களில் அறுவடைக்கு வருகிறது. தற்பொழுது இருப்பு வைக்கப்பட்ட வெங்காயமே சந்தைகளுக்கு வந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் சென்ற வாரங்களில் கிலோ 50 ரூபாய்க்கு விவசாயிகளிடம் இருந்து வியாபாரிகள் கொள்முதல் செய்தனர்.
நஷ்டம்
தற்போது விலை குறைந்து கிலோ 30 ரூபாய்க்கு கொள்முதல் செய்கின்றனர். மேலும் விலை குறைய வாய்ப்புள்ளது. இது வெங்காயம் பயிரிட்டுள்ள எங்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.
 ஏனென்றால் கிலோ 50 ரூபாய்க்கு விற்றால் தான் ஒரு ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை லாபம் கிடைக்கும். கிலோ 30 ரூபாய்க்கு விற்பதால் ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்படும் நிலை உள்ளது. 
இவ்வாறு அவர் கூறினார். 



Next Story