வாக்குச்சாவடிகளில் இன்று சனிக்கிழமை வாக்குப்பதிவு நடக்கிறது
திருப்பூர் மாவட்டத்தில் 1299 வாக்குச்சாவடிகளில் இன்று சனிக்கிழமை வாக்குப்பதிவு நடக்கிறது
திருப்பூர், பிப்.19-
திருப்பூர் மாவட்டத்தில் 1,299 வாக்குச்சாவடிகளில் இன்று (சனிக்கிழமை) வாக்குப்பதிவு நடக்கிறது. இதற்காக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. 3 போலீசார் பாதுகாப்பு பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.
இன்று வாக்குப்பதிவு
திருப்பூர் மாவட்டத்தில் 1 மாநகராட்சி, 6 நகராட்சிகள், 15 பேரூராட்சிகளில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி வாக்குப்பதிவு இன்று சனிக்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிக்கு நிறைவடைகிறது. மாநகராட்சி பகுதியில் 776 வாக்குச்சாவடிகள், 6 நகராட்சிகளில் 279 வாக்குச்சாவடிகள், 15 பேரூராட்சிகளில் 244 வாக்குச்சாவடிகள் என மொத்தம் 1,299 வாக்குச்சாவடிகளில் இன்று வாக்குப்பதிவு நடக்கிறது.
வாக்குச்சாவடிகளில் குடிநீர், கழிப்பிடம், மின்விளக்கு வசதிகள் செய்யப்பட்டதுடன், மாற்றுத்திறனாளிகள் வந்து செல்வதற்கு வசதியாக சாய்தள படிக்கட்டு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளன. சக்கர நாற்காலிகளும் தயாராக வைக்கப்பட்டுள்ளன. வாக்குச்சாவடிகளுக்கு முன்பு 100 மீட்டர், 200 மீட்டர் தூரத்தில் கோடுகள் வரையப்பட்டுள்ளன. அந்த பகுதிக்குள் வேட்பாளர்களின் சின்னங்கள் இருப்பது, வாகனங்கள் வராமல் இருப்பதற்காக கண்காணிக்கப்படுகிறது. வாக்குச்சாவடிகளில் பணியாற்ற தலைமை வாக்குச்சாவடி அலுவலர் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி ஒரு வாக்குச்சாவடிக்கு 4 பேர் வீதம் மாவட்டம் முழுவதும் 6 ஆயிரத்து 236 அலுவலர்கள் வாக்குச்சாவடிகளில் பணியாற்ற உள்ளனர். 25 வட்டார தேர்தல் பார்வையாளர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டனர். 225 பறக்கும் படையினர் பணப்பட்டுவாடாவை தடுக்கும் வகையில் பணி மேற்கொண்டனர்.
பணிநியமன உத்தரவு
வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு கணினி மூலமாக பணி ஒதுக்கீடு செய்யப்பட்டு நேற்று காலை முதல் பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டது. திருப்பூர் மாநகராட்சி பகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் அலுவலர்களுக்கு ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டது. எந்த வாக்குச்சாவடிகளில் பணியாற்றுவது என்பது உள்ளிட்ட விவரங்கள் தெரிவிக்கப்பட்டது.
இதுபோல் மாவட்டம் முழுவதும் வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் அலுவலர்களுக்கு பணிநியமன உத்தரவு வழங்கப்பட்டது. அவர்கள் நேற்று மாலை முதல் வாக்குச்சாவடிகளுக்கு சென்றனர். மாவட்டத்தில் திருப்பூர் மாநகராட்சி பகுதியில் 131 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் 217 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறிப்பட்டு அந்த வாக்குச்சாவடிகளில் வெப் கேமரா மூலமாக வாக்குப்பதிவு அனைத்தும் பதிவு செய்யப்பட்டு திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு அறையில் இருந்து அதிகாரிகள் கண்காணிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. மற்ற வாக்குச்சாவடிகளில் கேமரா பொருத்தி வீடியோ பதிவு செய்யப்படுகிறது.
வாக்குப்பதிவு எந்திரங்கள்
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்குச்சாவடிகளுக்கு நேற்று காலை முதல் அனுப்பி வைக்கப்பட்டன. திருப்பூர் மாநகராட்சியில் நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, நல்லூர் மண்டல அலுவலகம், அனுப்ர்பாளையம் மண்டல அலுவலகங்களில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், வாக்குப்பதிவு பொருட்கள், கொரோனா தடுப்பு கருவிகள் அனுப்பி வைக்கப்பட்டன. மண்டல அலுவலர்கள் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை பெற்று லாரிகள் மூலமாக வாக்குச்சாவடிகளில் ஒப்படைத்தனர். அந்தந்த வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் போலீசார் நேற்றுமுதல் பணியில் ஈடுபட்டனர். மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், வாக்குப்பதிவு பொருட்கள், கொரோனா தடுப்பு கருவிகள் அனைத்தும் வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
வாக்குச்சாவடிகளுக்கு முன் வாக்காளர்கள் வரிசையில் நின்று வாக்களிக்கும்போது வெயில் கொடுமையில் இருந்து தப்பிக்க தற்காலிக சாமியானா பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இன்று காலை 6 மணி அளவில் மாதிரி வாக்குப்பதிவு நடக்கும். வாக்குச்சாவடிகளில் ஏஜெண்டுகளிடம் கையெழுத்து பெற்று அதன்பிறகு காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் வாக்களிக்க வந்தால் மாலை 5 மணிக்கு மேல் அவர்கள் வாக்களிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. இதற்காக முழு கவச உடைகள் உள்ளிட்ட தடுப்பு உபகரணங்கள் வைக்கப்பட்டுள்ளன. அதுபோல் வாக்களிக்க வரும் வாக்காளர்களின் உடல் வெப்பநிலையை கண்டறியும் வகையில் தெர்மல்ஸ்கேனர், முககவசம், கையுறை உள்ளிட்டவை தயாராக வாக்குச்சாவடிகளில் வைக்கப்பட்டுள்ளன.
டோக்கன்
வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு முடிகிறது. 6 மணிக்குள் வாக்குச்சாவடி வளாகத்துக்குள் வந்த வாக்காளர்கள் அதிகமாக இருந்தால் அவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்களிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு முடிந்ததும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ஏஜெண்டுகள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு பின்னர் வாக்கு எண்ணும் மையத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. தேர்தல் பணியில் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
-
Related Tags :
Next Story