தூத்துக்குடி கடற்கரையில் நீர் சாகச விளையாட்டுக்கள்: சுற்றுலாத்துறை செயலாளர் சந்திரமோகன் ஆய்வு
தூத்துக்குடி கடற்கரையில் நீர் சாகச விளையாட்டுகளை தொடங்குவது குறித்து தமிழக சுற்றுலாத் துறை செயலர் சந்திரமோகன் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்
தூத்துக்குடி:
தூத்துக்குடி கடற்கரையில் நீர் சாகச விளையாட்டுகளை தொடங்குவது குறித்து தமிழக சுற்றுலாத் துறை செயலர் பி.சந்திரமோகன் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
நீர் சாகச விளையாட்டு
தூத்துக்குடி மாவட்டம் நீண்ட கடற்கரையை கொண்டு உள்ளது. இதில் ஏராளமான மீனவ கிராமங்கள் உள்ளன. அதே நேரத்தில் பொதுமக்களின் பொழுதுபோக்குக்காக கடற்கரை பகுதியில் நீர் சாகச விளையாட்டுக்கள் தொடங்கப்பட வேண்டும் என்றும் பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தூத்துக்குடி மாவட்டத்தில் நீர் சாகச விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. அதன்பிறகு கொரோனா காரணமாக விளையாட்டு போட்டிகள் நடைபெறவில்லை.
இந்த நிலையில் தூத்துக்குடி புதிய துறைமுக கடற்கரை பகுதியில் நீர் சாகச விளையாட்டுக்களை நடத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி புதிய துறைமுக கடற்கரை பகுதி அழகிய மணல் பரப்பை கொண்ட நீண்ட கடற்கரையாக உள்ளது. இந்த கடற்கரைக்கு பொழுது போக்குக்காக ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் கடற்கரை பகுதியில் தமிழக சுற்றுலாத் துறை சார்பில் நீர் சாகச விளையாட்டுகளை தொடங்குவது தொடர்பாக கடந்த சில ஆண்டுகளாகவே பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.
ஆய்வு
இதைத் தொடர்ந்து தூத்துக்குடி புதிய துறைமுக கடற்கரையில் நீர் சாகச விளையாட்டுகளை தொடங்குவது தொடர்பாக தமிழக அரசின் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை செயலர் பி.சந்திரமோகன் நேற்று நேரில் ஆய்வு செய்தார். அவர் கடற்கரை பகுதி முழுவதும் காரில் சென்று பார்வையிட்டு சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்தார். கடற்கரை பகுதியில் சுற்றுலா பயணிகளுக்கு செய்ய வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்தும் ஆய்வு மேறகொண்டார். முன்னதாக துறைமுக விருந்தினர் மாளிகையில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
கலந்து கொண்டவர்கள்
இந்த கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், வஉ..சி துறைமுக தலைமை என்ஜினீயர் ரவிக்குமார், மாவட்ட சுற்றுலா அலுவலர் சீனிவாசன், உதவி சுற்றுலா அலுவலர் கோவிந்தராஜ் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மேலும் இந்த ஆய்வின் அடிப்படையில் தூத்துக்குடி புதிய துறைமுக கடற்கரை பகுதியில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் நீர் சாகச விளையாட்டுகளை தொடங்குவது தொடர்பாக திட்டம் வகுக்கப்பட்டு உரிய நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story