துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வாக்குச்சாவடிகளுக்கு கொண்டு செல்லப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள்


துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வாக்குச்சாவடிகளுக்கு கொண்டு செல்லப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள்
x
தினத்தந்தி 18 Feb 2022 7:59 PM IST (Updated: 18 Feb 2022 7:59 PM IST)
t-max-icont-min-icon

தேனி மாவட்டத்தில் இன்று நடக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக வாக்குச்சாவடி மையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் எடுத்துச்செல்லப்பட்டன.

தேனி:
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்று (சனிக்கிழமை) நடக்கிறது. தேனி மாவட்டத்தில் 6 நகராட்சிகளில் 177 கவுன்சிலர் பதவிகள், 22 பேரூராட்சிகளில் 336 கவுன்சிலர் பதவிகள் என மொத்தம் 513 பதவிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில், கூடலூர் நகராட்சி 6-வது வார்டு, சின்னமனூர் நகராட்சி 25-வது வார்டு மற்றும் குச்சனூர் பேரூராட்சி 7-வது வார்டு தி.மு.க. வேட்பாளர்கள், வடுகபட்டி பேரூராட்சியில் 1, 10, 11, 14 ஆகிய வார்டுகளில் சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தம் 7 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
இதையடுத்து 506 கவுன்சிலர் பதவிகளுக்கான தேர்தல் இன்று நடக்கிறது. இந்த பதவிகளுக்கு மொத்தம் 1,960 பேர் போட்டியிடுகின்றனர். மாவட்டத்தில் மொத்தம் 733 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடக்கிறது. வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது.
வாக்குப்பதிவு எந்திரங்கள்
தேர்தல் நடக்கும் நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலகங்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தன. முன்னதாக நேற்று வாக்குப்பதிவு எந்திரங்கள், வாக்குச்சாவடி மையங்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டன. வாக்குப்பதிவு எந்திரத்துடன் கட்டுப்பாட்டு கருவி, மாற்றுத்திறனாளிகளுக்கான சக்கர நாற்காலி, வாக்குச்சாவடிகளுக்கு தேவையான எழுது பொருட்கள், சீல் வைக்க தேவையான பொருட்கள், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்கான தெர்மல் ஸ்கேனர் கருவி, கையுறை, முக கவசம், சானிடைசர், கொரோனா நோயாளிகள் வாக்களிப்பதற்கு தேவையான பாதுகாப்பு கவச உடை ஆகியவையும் வாக்குச்சாவடிகளுக்கு கொண்டு செல்லப்பட்டன.
இந்த தேர்தலுக்காக 733 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்குச்சாவடிகளுக்கு கொண்டு செல்லப்பட்டன. அத்துடன் கூடுதலாக 20 சதவீதம் வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒதுக்கப்பட்டு மண்டல தேர்தல் அலுவலர்களின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டன. வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் வாக்குச்சாவடிகளுக்கான பொருட்கள் அனுப்பும் முன்பு அந்தந்த பகுதிகளுக்கான தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முன்னிலையில் சரிபார்க்கப்பட்டன.
வாக்குச்சாவடிகள்
வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு நேற்று இறுதிக்கட்ட பயிற்சி நடத்தப்பட்டு பணி உத்தரவு வழங்கப்பட்டது. பின்னர் அவர்கள் வாக்குச்சாவடிகளுக்கு பணிக்கு வந்தனர். அவர்களிடம் வாக்குப்பதிவு எந்திரங்கள் உள்ளிட்ட பொருட்கள் ஒப்படைக்கப்பட்டன. அவர்கள் வாக்குச்சாவடிகளை வாக்குப்பதிவுக்கு தயார் படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
வாக்குச்சாவடிகளில் இருந்து 100 மீட்டர் தொலைவு மற்றும் 200 மீட்டர் தொலைவை அடையாளப்படுத்தும் வகையில் தெருக்கள் மற்றும் சாலையில் 100 மீட்டர், 200 மீட்டர் என எழுதப்பட்டன. அதுபோல், வாக்குச்சாவடி மையங்களுக்கு நேற்று காலை 8 மணிக்கே போலீசார் பாதுகாப்பு பணிக்கு சென்றனர். வாக்குப்பதிவு எந்திரங்கள் பிற்பகலில் தான் வாக்குச்சாவடிகளுக்கு எடுத்து வரப்பட்டன. தொடர்ந்து வாக்குச்சாவடிகளின் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டனர். மாவட்டத்தில் சுமார் 1,500 போலீசார் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Next Story