இலங்கைக்கு படகில் கடத்த முயன்ற ரூ.2 கோடி கஞ்சா பறிமுதல்
ஆந்திராவில் இருந்து நாகை வழியாக இலங்கைக்கு படகில் கடத்த முயன்ற ரூ.2 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கஞ்சாவை கடத்த முயன்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 1 விசைப்படகு, 4 மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டது.
நாகப்பட்டினம்:
ஆந்திராவில் இருந்து நாகை வழியாக இலங்கைக்கு படகில் கடத்த முயன்ற ரூ.2 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கஞ்சாவை கடத்த முயன்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 1 விசைப்படகு, 4 மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டது.
தீவிர கண்காணிப்பு
ஆந்திராவில் இருந்து இலங்கைக்கு நாகை வழியாக படகில் கஞ்சா கடத்தப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. இதனை தடுக்க கடலோர காவல் குழும போலீசார், கியூ பிரிவு போலீசார், தனிப்படை போலீசார் தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நாகை கீச்சாங்குப்பத்தில் இருந்து விசைப்படகு மூலம் இலங்கைக்கு கஞ்சா கடத்தப்படுவதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் போலீசார், கீச்சாங்குப்பம் கடல் முகத்துவார ரெட்டை பனைமரதடி படகு அணையும் இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகளில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
ரூ.2 கோடி கஞ்சா பறிமுதல்
அப்போது அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த மோகன்(வயது 37) என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் பண்டல், பண்டலாக கஞ்சா பதுக்கி வைத்து இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து ரூ.2 கோடி மதிப்புள்ள 400 கிலோ கஞ்சாவை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், ஆந்திராவில் இருந்து கொண்டு வரப்பட்ட கஞ்சாவை நாகை வழியாக இலங்கைக்கு விசைப்படகில் கடத்த முயன்றது தெரிய வந்தது.
5 பேர் கைது
இது தொடர்பாக விசைப்படகு உரிமையாளர் மோகன், கீச்சாங்குப்பத்தை சேர்ந்த ஜெகதீஷ்(34), அக்கரைப்பேட்டையை சேர்ந்த சிலம்பு செல்வம்(35), நிவாஸ்(30), பாப்பாகோவிலை சேர்ந்த சரவணன்(37) ஆகிய 5 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ரூ.50 லட்சம் மதிப்புள்ள விசைப்படகு, 4 மோட்டார் சைக்கிள்கள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து நாகை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியசாமி வழக்குப்பதிவு செய்து மேலும் சிலரை வலைவீசி தேடி வருகிறார்.
இதனிடையே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர், கஞ்சாவுடன் பறிமுதல் செய்யப்பட்ட விசைப்படகை நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மீனவர்கள் மீது கடும் நடவடிக்கை
ஆந்திராவில் இருந்து கடத்தி கொண்டு வரப்படும் கஞ்சாவானது நாகை வழியாக விசைப்படகு மூலம் இலங்கைக்கு கடத்தப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. இதனை தடுக்க தனிப்படை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். கடத்தல்காரர்களும் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
நாகை மாவட்ட கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்தப் படுவதால் இதில் சில மீனவர்களுக்கும் தொடர்பு இருப்பது தெரிய வருகிறது. அவ்வாறு கஞ்சா கடத்தலில் மீனவர்கள் ஈடுபடுவது தெரிய வந்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். கடற்கரை பகுதிகளில் இதுபோன்ற கஞ்சா கடத்தல் சம்பவங்கள் நடப்பது தெரிய வந்தால், மீனவ கிராமத்தினர், போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இது தொடர்பாக மீனவர்கள், போலீசாருக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தனிப்படை போலீசாருக்கு பாராட்டு
நாகையில் இருந்து இலங்கைக்கு விசைப்படகில் கடத்த முயன்ற கஞ்சாவை தனிப்படை போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்தனர். இதில் துரிதமாக செயல்பட்டு, குற்றவாளிகளை கைது செய்த தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகனுக்கு, திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. பாலகிருஷ்ணன் பாராட்டு சான்றிதழ் வழங்கினார். தொடர்ந்து தனிப்படை போலீசாருக்கு வெகுமதி வழங்கி பாராட்டினார்.
Related Tags :
Next Story