நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி 5 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க ஏற்பாடு


நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி 5 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க ஏற்பாடு
x
தினத்தந்தி 18 Feb 2022 9:38 PM IST (Updated: 18 Feb 2022 9:38 PM IST)
t-max-icont-min-icon

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி இன்று (சனிக்கிழமை) வாக்குப்பதிவு நடக்கிறது. இதில் 5 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்கவும், கொரோனா நோயாளிகள் வாக்களிக்க 1 மணி நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாகவும் கலெக்டர் தெரிவித்தார்.

கடலூர், 

கடலூர் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான பாலசுப்பிரமணியம் நேற்று அவரது அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

5¾ லட்சம் வாக்காளர்கள்

கடலூர் மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 6 நகராட்சிகள், 14 பேரூராட்சிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்று (சனிக்கிழமை) நடக்கிறது. இந்த தேர்தலையொட்டி அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளது. தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு 3-ம் கட்ட பயிற்சி அளித்து, அவர்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டது. தொடர்ந்து அவர்கள் வாக்குச்சாவடிகளுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த தேர்தலில் ஏற்கனவே 5 லட்சத்து 78 ஆயிரத்து 812 வாக்காளர்கள் இருந்த நிலையில், தற்போது 8 ஆயிரத்து 376 வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டு உள்ளனர். இதன் மூலம் 5 லட்சத்து 87 ஆயிரத்து 188 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதற்காக 715 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில் 159 பதற்றமான வாக்குச்சாவடிகள், 250 மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகள் எனவும் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில் மிகவும் பதற்றமான 250 வாக்குச்சாவடி மையங்களில் வெப் கேமரா, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் கட்டுப்பாட்டு அறை மூலம் கண்காணிக்கப்பட உள்ளது.

கள்ள ஓட்டு

தேர்தல் பணியில் 5 ஆயிரம் அலுவலர்கள் ஈடுபட உள்ளனர். இந்த தேர்தலை சுமூகமாகவும், அமைதியாகவும் நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. வாக்குச்சாவடிகளில், வேட்பாளர்களின் முகவர்கள் அமர்ந்து இருப்பார்கள். அடையாள அட்டை இருக்கும் நபர்களை மட்டுமே போலீசார் வாக்குச்சாவடிக்குள் செல்ல அனுமதிப்பார்கள். இதில் கள்ள ஓட்டு போட வாய்ப்பு இல்லை.

வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி, மாலை 5 மணி வரை நடக்கும். அதற்குள் கூட்டம் அதிகமாக இருந்தால், அவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு, வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள். 5 மணி முதல் 6 மணி வரை கொரோனா நோயாளிகள் வாக்களிக்க கூடுதலாக 1 மணி நேரம் வழங்கப்படுகிறது.

தபால் வாக்கு

1066 பேர் தபால் வாக்களிக்க வாக்குச்சீட்டு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி அவர்கள் வாக்களித்து வருகிறார்கள். வருகிற 22-ந்தேதி காலை 8 மணிக்கு வாக்குகள் எண்ணப்படும். அதற்கு முன்பாக தபால் வாக்குகளை அளிக்க வேண்டும். வாக்குச்சாவடிகளில் 465 சி.சி.டி.வி., 250 வெப் கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 97 நுண் பார்வை யாளர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அனைத்து வாக்குச்சாவடி மையங்களுக்கும் கையுறைகள், முக கவசங்கள், கிருமி நாசினி, கவச உடைகள் உள்ளிட்ட அனைத்து உபகரணங்களும் வழங்கப்பட்டுள்ளது. ஆகவே வாக்காளர்கள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் பாலசுப்பிரமணியம் கூறினார்.

Next Story