இன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: முன்னேற்பாடு பணிகளை தேர்தல் பார்வையாளர் ஆய்வு
நாமக்கல் நகராட்சியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முன்னேற்பாடு பணிகளை தேர்தல் பார்வையாளர் இன்னசென்ட் திவ்யா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நாமக்கல்:
நாமக்கல் நகராட்சியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முன்னேற்பாடு பணிகளை தேர்தல் பார்வையாளர் இன்னசென்ட் திவ்யா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நகராட்சி தேர்தல்
நாமக்கல் நகராட்சியில் 39 வார்டுகளில் உறுப்பினர் பதவிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்று (சனிக்கிழமை) நடக்கிறது. இதில் 22 மற்றும் 25-வது வார்டு உறுப்பினர்கள் ஏற்கனவே போட்டியின்றி தேர்வாகி இருந்தனர். அதனால் இன்று மீதமுள்ள 37 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி நாமக்கல் நகராட்சி பகுதியில் 109 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.
நகராட்சியில் உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு 8 மண்டல அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்களிடம் நேற்று மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள் மற்றும் வாக்குப்பதிவிற்கு தேவையான பொருட்கள் தேர்தல் நடத்தும் அலுவலர் சுதா முன்னிலையில் வழங்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து வாக்குச்சாவடிகளுக்கு அனைத்து பொருட்களும் போலீஸ் பாதுகாப்புடன் சரக்கு வாகனங்களில் கொண்டு செல்லப்பட்டன.
தேர்தல் பார்வையாளர் ஆய்வு
நாமக்கல் நகராட்சியில் 524 பேர் தேர்தல் வாக்குப்பதிவு பணியில் ஈடுபட உள்ளனர். அவர்களுக்கு பணி ஆணை அந்தந்த மண்டல அலுவலர்கள் மூலம் நேற்று நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் வழங்கப்பட்டது.
முன்னதாக நாமக்கல் நகராட்சி அலுவலகத்தில் தேர்தல் முன்னேற்பாடு பணிகளை தேர்தல் பார்வையாளர் இன்னசென்ட் திவ்யா பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது வாக்குப்பதிவுக்கு தேவையான அழியாத மை, படிவங்கள், பென்சில், ரப்பர் பாயிண்டு உள்பட பல்வேறு பொருட்கள் ஏற்கனவே சாக்குப்பையில் பேக்கிங் செய்து தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்ததை அவர் பார்வையிட்டார்.
அறிவுறுத்தல்
மேலும் வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்பட இருந்த வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள் மற்றும் வாக்குப்பதிவுக்கு தேவையான பொருட்களின் விவரங்களை நாமக்கல் நகராட்சி ஆணையாளரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான சுதாவிடம் கேட்டறிந்தார். அதைத்தொடந்து நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலைக்கல்லூரிக்கு தேர்தல் பார்வையாளர் இன்னசென்ட் திவ்யா சென்றார். அங்கு வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு பணிஆணை வழங்கப்படுவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது வாக்குச்சாவடிகளுக்கு ஒப்படைக்கப்படும் வாக்குப்பதிவு எந்திரங்களில் இன்று (நேற்று) மாதிரி வாக்குப்பதிவு நடத்தி சரி பார்த்துக்கொண்டு மீண்டும் வாக்குப்பதிவுக்கு தயார் நிலையில் வைக்குமாறு அறிவுறுத்தினார்.
Related Tags :
Next Story