கோடியக்கரை மீனவர்களை கத்தியை காட்டி மிரட்டி ரூ.50 ஆயிரம் பொருட்கள் கொள்ளை


கோடியக்கரை மீனவர்களை கத்தியை காட்டி மிரட்டி ரூ.50 ஆயிரம் பொருட்கள் கொள்ளை
x
தினத்தந்தி 18 Feb 2022 9:50 PM IST (Updated: 18 Feb 2022 9:50 PM IST)
t-max-icont-min-icon

கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த கோடியக்கரை மீனவர்களை கத்தியை காட்டி மிரட்டி ரூ.50 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

வேதாரண்யம்:
கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த கோடியக்கரை மீனவர்களை கத்தியை காட்டி மிரட்டி ரூ.50 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
ரூ.50 ஆயிரம் பொருட்கள் கொள்ளை
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கோடியக்கரையை சேர்ந்த சீனிவாசன் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் அதே ஊரை சேர்ந்த செல்வம், ரவி, நாகூரான், புவியரசன் ஆகிய 4 மீனவர்கள் நேற்று முன்தினம் மாலை மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். 
இவர்கள் நேற்று அதிகாலையில் கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு படகில் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள், மீனவர்களை கத்திைய காட்டி மிரட்டி மீனவர்களிடம் இருந்து மீன்பிடிவலை, பெட்ரோல், செல்போன், ஜி.பி.எஸ். கருவி உள்ளிட்ட ரூ.50 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை கொள்ளையடித்துக்கொண்டு தாங்கள் வந்த படகில் ஏறி சென்றனர்.
கடலில் தத்தளித்த படகு
இலங்கை கடற்கொள்ளையர்கள், பெட்ரோலை கொள்ளையடித்து சென்ற நிலையில் மீனவர்களின் படகில் பெட்ரோல் தீர்ந்து, கடலில் தத்தளித்து கொண்டிருந்தது. இந்த நிலையில் மீன்பிடித்து விட்டு திரும்பி வந்த காரைக்கால் மீனவர்கள், கடலில் படகு தத்தளித்ததை பார்த்தனர். உடனே அங்கு சென்ற காரைக்கால் மீனவர்கள், படகில் தத்தளித்து கொண்டிருந்த மீனவர்களிடம் விசாரித்துள்ளனர். 
அப்போது கோடியக்கரை மீனவர்கள் நடந்த சம்பவத்தை அவர்களிடம் தெரிவித்துள்ளனர். இதை தொடர்ந்து காரைக்கால் மீனவர்கள் கோடியக்கரைக்கு வந்து அந்த பகுதி மீனவர்களிடம், படகில் பெட்ரோல் இன்றி 4 பேர் கடலில் தத்தளிப்பதாக தெரிவித்தனர்.
மீட்டு வந்தனர்
பின்னர் கோடியக்கரை மீனவர்கள் ஒரு படகில் பெட்ரோலை கொண்டு சென்று கடலில் தத்தளித்த மீனவர்களை மீட்டு நேற்று மதியம் கோடியக்கரைக்கு கொண்டு வந்தனர்.
இதுகுறித்து மீன்வளத்துறை அதிகாரியிடமும், கடலோர காவல் படை குழும போலீசாரிடமும் புகார் தெரிவித்தனர். 
இலங்கை கடற்கொள்ளையர்களின் அட்டூழியத்தால் மீனவர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.

Next Story